கலைஞர் நகர் பகுதியில் தங்களுக்கு தகுதி இருந்தும் வீட்டு மனைப் பட்டா வழங்கவில்லை என கூறி 200 க்கும் மேற்பட்ட மக்கள் குடிசை அமைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, ஆதிதிராவிடர் சமுதாய மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவை முறைக் கேடாக பயன்படுத்தி வெளியூர் நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதைக் கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் தமிழக முதல்வர் கலந்து கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வீடு இல்லாத ஏழை,எளிய மக்களுக்கு 85,000 பட்டா வழங்கப்படும் என்று அறிவித்து முதல் கட்டமாக சில பேருக்கு பட்டாக்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இதில் சுண்ணாலம்பட்டி தரப்பு கலைஞர் நகரில் வீடற்ற, நிலம் இல்லாத ஏழை,எளிய ஆதிதிராவிடர் மக்களுக்கு சுமார் 150 இலவச வீட்டு மனை பட்டா வழங்க உத்தேசிக்கப்பட்டு பயனாளிகள் தேர்வு நடைபெற்றது.
இத்தேர்வில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தகுதியற்ற நபர்களுக்கும், வெளியூர் நபர்களுக்கும் பட்டா வழங்கப்பட்டுள்ளதை அறிந்த ஊத்தங்கரை பகுதி மக்கள் கலைஞர் நகர் பகுதியில் தங்களுக்கு தகுதி இருந்தும் வீட்டு மனைப் பட்டா வழங்கவில்லை என கூறி 200 க்கும் மேற்பட்ட மக்கள் குடிசை அமைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர், இதனால் பரப்பரப்பும் பதட்டமும் நிலவியது.

இது குறித்து தகவல் அறிந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் முருகன், வட்டாட்சியர் ராஜலட்சுமி ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட வி.சி.க. செயலாளர் மாதேஷ், சுன்னாலம்பட்டி கிராமத்தில் ஆதிதிராவிடர் சமுதாய மக்களுக்காக தமிழக அரசு 7 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி இலவச பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான பட்டாவை ஏற்கனவே தமிழக முதல்வரால் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் ஆதிதிராவிட சமுதாய மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பட்டாவை 240 அரசு ஊழியர்கள் மற்றும் எஸ்.சி., பிரிவு மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து யாருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது என்ற பட்டியல் கேட்டால் கொடுக்காமல் ஆதிதிராவிட நலத்துறை வழங்க மறுக்கிறது. இலவச வீட்டுமனை பட்டா என சொல்லி நிலத்தை பணம் பெற்றுக் கொண்டு விற்பனை செய்துள்ளனர்.
ஆகையால் தகுதியுள்ள ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய வீட்டு மனைப் பட்டாவை வழங்கபடவில்லை என்றால் வருகின்ற 12-ம் தேதி தனி வட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தார்.
அப்போது நகர விசிக செயலாளர் ஆலப்பட்டி ரமேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
