கொரோனா காலத்திலேயே போயிருப்பார் என எடப்பாடி தரம்தாழ்ந்து பேச்சு மரணத்தை பார்த்து பயப்படுபவன் நான் அல்ல: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி.!
திமுக
விழுப்புரம்: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து விழுப்புரத்தில் நேற்று இரவு தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது.
இதில், விழுப்புரம் தொகுதி வேட்பாளர் டாக்டர் லட்சுமணன், திருக்கோவிலூர் தொகுதி வேட்பாளர் டாக்டர் பொன்.கௌதம சிகாமணி, செஞ்சி தொகுதி செஞ்சி மஸ்தான், விக்கிரவாண்டி தொகுதி அன்னியூர் சிவா, வானூர் தொகுதியில் கௌதம் திராவிட மணி, மயிலம் தொகுதி தேமுதிக வெங்கடேசன், திண்டிவனம் தொகுதி விசிக வன்னி அரசு ஆகியோரை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
ராமதாசுக்கு இன்றைக்கு பலர் நம்பிக்கை துரோகம் செய்திருக்கலாம். ஆனால், தலைவர் கலைஞரும், நானும், திமுகவும், திராவிட முன்னேற்றக் கழகமும், அவரை என்றைக்கும் சமூகநீதி போராளியாகத்தான் பார்க்கிறோம்; மதிக்கிறோம்.இன்று என்டிஏ என்ற பெயரில் அமைக்கப்பட்டிருக்கும் கூட்டணி என்பதே, துரோகிகளால் தமிழ்நாட்டிற்கு புதிய துரோகங்கள் செய்ய அமைக்கப்பட்டிருக்கும் கூட்டணி. இவர்களின் துரோகப் பட்டியலை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் தெரியும்.
துரோகங்களால், தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் கெடுக்க நினைக்கும் என்டிஏ. என்டிஏ என்றால், உங்களுக்கு புரிவதுபோன்று ஈசியாக சொல்கிறேன். எந்த வளர்ச்சியும் இல்லாத கூட்டணி. இவ்வளவு துரோகங்களையும் செய்துவிட்டு, கூச்சமே இல்லாமல், மக்களிடம் வாக்கு கேட்டு வருகிறார்கள். பழனிசாமி அவர்களே… எங்களது சாதனைக்கு மட்டுமல்ல; உங்களுடைய ஒவ்வொரு பொய்க்கும் என்னால் புள்ளிவிவரங்களோடு பதிலடி தர முடியும். தோல்வி பயத்தில் பழனிசாமி தினம் தராதரம் இல்லாமல் தரங்கெட்டு பேசுகிறார்.
இன்றைக்கு மாலை சென்னையில் என்னைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? திமுக ஆட்சியில் கொரோனா வந்திருந்தால், இவரே போயிருப்பார் என்று என்னை பேசியிருக்கிறார்.
பழனிசாமி அவர்களே…
என் மரணத்தை பற்றி பேசுகிறீர்களே… மரணத்தைப் பார்த்து கலங்கக் கூடியவனோ, பயப்படுகிறவனோ நான் அல்ல இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், 1976ல் நீங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, 23 வயதில் மிசாவில் கைது செய்யப்பட்டு சிறைக் கொடுமைக்கு ஆளானவன். ஓராண்டு காலம் நெஞ்சுரத்தோடு சிறையில் இருந்தவன் நான்.
பொதுவாழ்க்கையில் எல்லாவற்றையும் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்று என்னை சிறைக்கு அனுப்பி வைத்தவர் என்னுடைய ஆருயிர் தலைவர் என்னுடைய தந்தை கலைஞர்.
கொடுஞ்சிறையின் கொடுமைக்கே பயப்படாதவன் நான், இந்தக் கொரோனாவுக்கா பயப்படப் போகிறேன். கொரோனா மேல் அனைவரும் பெரும் அச்சத்தில் இருந்தபோதே, அதற்கான உடை அணிந்து கொண்டு கொரோனா வார்டுக்குள் சென்றவன்தான் இந்த ஸ்டாலின்.
இதுவரை யாருக்கும் சொல்லாததை இப்போது சொல்கிறேன்.
நான் கொரோனா வார்டுக்குள் செல்லப் போகிறேன் என்று யாரிடமும் நான் சொல்லவில்லை. கலெக்டர், அமைச்சர்கள், எல்.எல்.ஏ.க்கள், என் உதவியாளர்கள் என்று அனைவரும் இருந்தார்கள். ஆனால் யாரிடமும் நான் சொல்லவில்லை. இப்படி நான் சொல்லாமல் சென்ற காரணத்தினால், என் மனைவி துர்காவதி என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசாமல் இருந்தார். இது சத்தியம்… மக்களைக் காக்க எந்தளவுக்கும் துணிச்சலாக செல்லக்கூடியவன். அதற்கெல்லாம் பயந்து அரசியல் தலைவனாக நான் இல்லை.
பழனிசாமியின் கீழ்த்தரமான பேச்சைக் கேட்ட பிறகு, என்னுடைய வருத்தம் எல்லாம் என்ன தெரியுமா? தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., இனமானப் பேராசிரியர் என்று எத்தனையோ பண்பாடுமிக்க பெருந்தலைவர்களிடம் நேரில் பழகக்கூடிய நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட நான், இன்று இவருக்கெல்லாம் பதில் சொல்லும் நிலை இருக்கிறதே என்று உண்மையிலேயே வருத்தப்படுகிறேன். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஆன பின்பு பழனிசாமி வென்றதே இல்லை.
தி.மு.க. தலைவரான பின் உங்கள் ஆதரவால் நான் தோற்றதே இல்லை. பாஜக எனும் பேரழிவை தமிழ்நாட்டிற்குள் கொண்டுவர நினைக்கும் அடிமை பழனிசாமிக்கு, தமிழ்நாட்டு மக்கள் கடுமையான தண்டனையை இந்தத் தேர்தலில் கொடுக்க வேண்டும்.
உண்மையில், நடக்கும் தேர்தல் என்பது, டெல்லிக்கும் – தமிழ்நாட்டுக்கும் நடக்கும் தேர்தல். தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் பத்து தோல்வி பழனிசாமிக்கு, பதினோராவது தோல்வியை கொடுத்து விரட்ட வேண்டும்.
டபுள் எஞ்சின், டப்பா எஞ்சின் என்று சொல்லிக் கொண்டு, டெல்லியின் ரிமோட் கண்ட்ரோலுக்கு ஆடும் அடிமைகள் தமிழ்நாட்டை ஆளக் கூடாது! தமிழ்நாட்டை நாசப்படுத்த நினைக்கும் ஆணவ பாஜவும், அடிமை அதிமுகவும் வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தப்பட வேண்டும். அதற்கு, திராவிட முன்னேற்றக் கழகம்தான் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும். கலைஞரின் மகனாக கேட்கிறேன். திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய மதசார்ப்பற்ற முற்போக்க கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
