தேமுதிகவிற்கு 'குட்பை'.. பிரேமலதாவிற்கு நடிகர் மீசை ராஜேந்திரன் கடிதம்.!
தேமுதிக
சென்னை: தேமுதிகவில் இருந்து தன்னை விடுவிக்கும்படி கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதாவிற்கு நடிகர் மீசை ராஜேந்திரன் பரபரப்பான கடிதத்தை எழுதியுள்ளார்.
விஜயகாந்துடன் நெருக்கமாக செயல்பட்டு வந்த மீசை ராஜேந்திரன் திடீரென விலகுவதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக மீசை ராஜேந்திரன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில், ''நான் கேப்டன் மன்றத்தில் 31 ஆண்டுகளாகவும், கட்சியில் 21 ஆண்டுகளாகவும் உழைத்திருக்கிறேன். இப்போது தேமுதிக செய்தி தொடர்பாளராக பதவியில் இருக்கிறேன்.
இந்த பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் விடுவிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார். 3 முறை தேர்தலில் போட்டியிட்ட ராஜேந்திரனுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கவில்லை
இதுதொடர்பாக மீசை ராஜேந்திரன் கூறும்போது, ''நான் 31 ஆண்டுகளாக கேப்டன் (விஜயகாந்த்) மன்றத்தில் இருந்தேன். 21 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன். விஜயகாந்த் உடன் விஸ்வாசமாக இருந்தேன். ஆனால் எனது விஸ்வாசத்துக்கு தகுந்த மதிப்பும், மரியாதையும் இல்லை என்பது இப்போது தெரியவந்துள்ளது.
இதனால் அங்கிருந்து நான் விலகுகிறேன். கேப்டன் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் எந்த வித மனவருத்தமும் எனக்கும் கிடையாது. கேப்டன் இல்லை என்றால் நான் இல்லை. சினிமா உள்பட அனைத்து இடங்களிலும் கேப்டன் தான் எனக்கு வாய்ப்பளித்தார். ஆனால் இப்போது அங்கு (தேமுதிக) இருக்கும் சூழ்நிலைகள் சரியில்லை. நிர்வாக பொறுப்புகளில் உள்ளவர்களால் சூழல் சரியில்லை. இதனால் நான் ராஜினாமா செய்வதாக கொடுத்துள்ளேன்'' என்று கூறியுள்ளார்.
மீசை ராஜேந்திரன் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர். இவருக்கு சினிமாவில் விஜயகாந்த் தான் வாய்ப்பு வழங்கினார். இதனால் விஜயகாந்தின் தீவிர விசுவாசியாக மாறினார். மேலும் விஜயகாந்த் தேமுதிகவை தொடங்கியதும் கட்சியில் இணைந்தார். 2006 சட்டசபை தேர்தலில் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி சட்டசபை தொகுதியிலும், 2016, 2021சட்டசபை தேர்தல்களில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டசபை தொகுதிகளிலும் களமிறங்கி தோல்வியடைந்தார்.
இந்த முறை முதல் முறையாக தேமுதிக, திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. தேமுதிகவிற்கு மொத்தம் 10 சட்டசபை தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் வழங்கப்பட்டது. இதில் மீசை ராஜேந்திரனுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது கட்சியில் அனைத்து வகையான பொறுப்புகளில் இருந்தும் தன்னை விடுவிக்கும்படி பிரேமலதாவிற்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
