கடும் அமளிக்கிடையே மீண்டும் 370வது பிரிவு நிறைவேற்றம்.. ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் களேபரம்
பாஜகவின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ஒருதலைபட்சமானது எனத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஸ்ரீநகர்: கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவை ரத்து செய்தது. இதன் மூலம் மாநிலமானது, ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.
இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. இந்த நிலையில், தற்போது ஜம்மு காஷ்மீர் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று முக்கியமான தீர்மானம் ஒன்று கடும் அமளிகளுக்கு இடையே நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இதன்படி, "ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களின் அடையாளம், கலாச்சாரம் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கும் சிறப்பு அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பு உத்தரவாதங்களின் முக்கியத்துவத்தை இந்த சட்டமன்றம் மீண்டும் உறுதிப்படுத்துவதாக கூறிய துணை முதலமைச்சர் கரிந்தர் செளத்ரி, 370வது சட்டப்பிரிவை நீக்கியது ஒருதலைப்பட்சமானது எனத் தெரிவித்து அதற்கான தீர்மானத்தை முன்மொழிந்தார்.
இதனையடுத்து, "இந்தத் தீர்மானமானது இன்றைய அலுவல்களின் பட்டியலில் இல்லை. எனவே, இதனை நாங்கள் நிராகரிக்கிறோம். எங்களுக்கு அளிக்கப்பட்ட அலுவல் பட்டியலில் துணைநிலை ஆளுநர் உரை மீதான விவாதம் மட்டுமே இருந்தது" என எதிர்கட்சித் தலைவர் சுனில் சர்மா உள்பட பிற பாஜக உறுப்பினர்கள் கூறினர்.
இதனையடுத்தும், பாஜக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற சபாநாயகர் அப்துல் ரஹீம் ரதேர், தீர்மானத்தை குரல் வாக்கெடுப்புக்கு விட்டார். இதனால், பலத்த கூச்சலுக்கு மத்தியில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனிடையே, கடும் அமளி மற்றும் கூச்சல் காரணமாக, இரண்டு முறை அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இது குறித்து பேசிய ஜம்மு காஷ்மீர் மாநில முதலமைச்சர் ஓமர் அப்துல்லா, "ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் தனது கடமையைச் செய்து உள்ளது" எனத் தெரிவித்தார்.