வேப்பனஹள்ளி தொகுதியில் தமிழக வெற்றி கழகம் வேட்பாளர் எஸ்.ஆர். சம்பங்கி வேட்புமனு தாக்கல். !

கிருஷ்ணகிரி

வேப்பனஹள்ளி தொகுதியில் தமிழக வெற்றி கழகம் வேட்பாளர் எஸ்.ஆர். சம்பங்கி வேட்புமனு தாக்கல். !

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி தொகுதியில் தமிழக வெற்றி கழகம் வேட்பாளர் எஸ்.ஆர். சம்பங்கி வேட்புமனு தாக்கல்: மக்கள் மாற்றத்தை விரும்புவதாக  பேட்டி.

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.ஆர். சம்பங்கி இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கலுக்கு முன்னதாக, சூளகிரி அருகே உள்ள ரவுண்டானாவில் இருந்து ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் உற்சாகமாக ஊர்வலமாக வந்த சம்பங்கி, பின்னர் சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி. கீதா ராணியிடம் தனது மனுவை ஒப்படைத்தார்.

வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.ஆர். சம்பங்கி......
தனக்கு போட்டியிட வாய்ப்பளித்த கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் செங்கோட்டையன் ஆகியோருக்குத் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

வேப்பனஹள்ளி தொகுதியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதே தனது முதல் இலக்கு என்றும், தொகுதியில் உள்ள அனைத்துப் பிரச்சனைகளையும் ஆய்வு செய்து மக்களுக்குத் தேவையான நன்மைகளைச் செய்யப்போவதாகவும் உறுதி அளித்தார்.

தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்தபோது பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் கட்சிக்கும், தலைவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிப்பதாகத் தெரிவித்தார். குறிப்பாக இளைஞர்களின் ஆதரவு தங்களுக்குப் பெரும் பலமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

எங்கள் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் அளிக்கும் வரவேற்பை பார்க்கும்போதே வேப்பனஹள்ளி தொகுதியில் தமிழக வெற்றி கழகம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது" என அவர் கூறினார்.
 
எங்கள் கட்சியைப் பொறுத்தவரை எங்களுக்குத் தலைவர் தான் முக்கியம். மற்றவர்கள் அவர்களின் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்கள், நாங்கள் எங்கள் கொள்கைப்படி போட்டியிடுகிறோம். எங்களுக்கு என்றும் 'அம்மா' தான் குரு" என்று குறிப்பிட்டார்.

திமுக, அதிமுக போன்ற பாரம்பரியக் கட்சிகள் இருந்தாலும், மக்கள் தற்போது ஒரு பெரிய மாற்றத்தை விரும்புவதாகவும், அந்த மாற்றமாகத் தமிழக வெற்றி கழகம் இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வேப்பனஹள்ளி தொகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு, சாலை வசதிகள் மற்றும் வனப்பகுதிகளில் நிலவும் யானைகள் பிரச்சனை போன்றவற்றுக்குத் தான் வெற்றி பெற்ற பிறகு உரிய முறையில் தீர்வு காணப் போவதாக எஸ்.ஆர். சம்பங்கி உறுதியளித்தார்.

செய்தியாளர்

மாருதி மனோ