திமுக, அதிமுக, த வெ க அறிவித்துள்ள இலவச திட்டங்களும் அதற்கான மொத்த தொகைகளின் விபரங்கள்? சாத்தியமாகுமா?
தமிழகம்
தமிழக சட்டசபை தேர்தலில் பிரதான கட்சிகளாக திமுக, அதிமுக மற்றும் புதிதாக விஜய்யின் தவெக ஆகிய கட்சிகள் வாக்குறுதிகள் தந்துள்ளன.
சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்தால் என்னென்ன நிறைவேற்றுவோம் என்று அறிவித்துள்ளன. வாக்காளர்களை கவருவதற்காக பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
இதில் அதிமுகவின் வாக்குறுதியை நிறைவேற்றவே மிக அதிகபணம் தேவைப்படும். எனினும் அதிமுக, திமுக, தவெக என எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரங்களைத் திரட்டுவது என்பது ஒரு மிகப்பெரிய சவாலாகவே இருக்கும்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால்... இதை எல்லாம் செய்வோம் என்று கவர்ச்சிகரமான அறிவிப்பினை திமுக, அதிமுக, தவெக வெளியிட்டுள்ளன. மகளிர் உரிமை தொகை முதல் இலவச சிலிண்டர், முதியோர் உதவி தொகை உயர்வு, பிரிட்ஜ், 8000 மதிப்புள்ள கூப்பன் என பல்வேறு வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன இதில் எந்த கட்சியால் எவ்வளவு அதிகம் என்பதை பார்ப்போம்.ங
முதல் ஆண்டில் நிறைவேற்ற தேவையான தொகை
அதிமுக: ₹74,969.8 கோடி
தமிழக வெற்றி கழகம் (TVK): ₹72,765.4 கோடி
திமுக : ₹57,311.5 கோடி
அதிமுக-வின் செலவு அதிகம்?
அதிமுக-வின் பட்டியலில் உள்ள இரண்டு முக்கிய திட்டங்கள் அதன் மொத்த செலவை வெகுவாக உயர்த்துகின்றன. ஒரே முறை நிவாரண உதவியாக 2 கோடி குடும்பங்களுக்கு தலா ₹10,000 வழங்குவது. இது மட்டுமே ₹20,000 கோடி செலவாகும். பெண்களுக்கான உதவித்தொகை: மாதம் ₹2,000 வீதம் 1.3 கோடி பெண்களுக்கு வழங்குவது. இதன் ஓராண்டு செலவு ₹31,200 கோடி ஆகும். இது தவிர, இலவச சமையல் எரிவாயு உருளைகள் (₹6,138 கோடி) மற்றும் முதியோர் ஓய்வூதிய உயர்வு போன்றவை கூடுதல் சுமையை ஏற்படுத்துகின்றன.
தவெக ஏன் இரண்டாம் இடத்தில் உள்ளது?
விஜய் தலைமையிலான தவெக பெண்களுக்கான உதவித்தொகையை ₹2,500 ஆக (மற்ற கட்சிகளை விட ₹500 அதிகம்) அறிவித்துள்ளது. இதனால் அந்த ஒரு திட்டத்திற்கு மட்டுமே ₹39,000 கோடி தேவைப்படும். மேலும் 6 இலவச சிலிண்டர்கள் (₹11,160 கோடி) போன்ற அறிவிப்புகளும் பெரும் செலவை உண்டாக்குகின்றன.
திமுக மூன்றாம் இடத்தில் உள்ளது
திமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற : ₹57,311.5 கோடி தேவைப்படும். மகளிர் உரிமை தொகை 2000 ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மட்டுமே ₹31,200 கோடி ஆகும். இதுதவிர 8000 கூப்பன் வழங்கப்பட உள்ளது. அதற்கும் கிட்டத்தட்ட ₹16,000 கோடி தேவையாகும். வருமான வரி செலுத்தாத 2 கோடி பேருக்கு கூப்பன் தரப்பட உள்ளது. இதுதவிர பல்வேறு நலத்திட்ட உதவிகளை திமுக அறிவித்துள்ளால் 57 ஆயிரம் கோடி தேவைப்பபடுகிறது.
இதற்கு ஆதாரங்கள்/நிதி வசதி தமிழகத்திடம் உள்ளதா?
இதில் திமுக, அதிமுக, தவெக என எந்த கட்சி சொல்லும் வாக்குறுதியை நிறைவேற்றமும் நிதி ஆதாரம் தமிழகத்திற்கு தற்போது இல்லை என்பதே எதார்த்தமான உண்மை. ஆனால் அரசு நினைத்தால் பல்வேறு மாற்றுவழிகளை பின்பற்றி ஓரளவு நிறைவேற்றலாம்.. ஆனால் அதுவுமே கடும் சவால் நிறைந்தது. ஏனெனில் தமிழகத்தின் மொத்தக் கடன் 2024-25 நிதியாண்டு இறுதியில் சுமார் ₹8.33 லட்சம் கோடி வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில், கூடுதலாக ஆண்டுக்கு ₹75,000 கோடி செலவிடுவது நிதிப்பற்றாக்குறையை கடுமையாக அதிகரிக்கும். தற்போதைய நிலையில் அரசு ஊழியர்கள் சம்பளம், வாங்கிய கடனுக்கு வட்டி ஆகியவற்றுக்கே அரசு கடன் வாங்கி தான் செலவு செய்கிறது.
தமிழகத்தின் வருமானம் எப்படி வருகிறது
அதேநேரம் தமிழகத்தின் வருவாயில் பெரும் பகுதி (50000 கோடி) டாஸ்மாக் (மது விற்பனை), பெட்ரோல் டீசல் மீதான வரி மற்றும் ஜிஎஸ்டி பங்கீடு மூலம் கிடைக்கிறது. இந்தப் புதிய திட்டங்களைச் செயல்படுத்த வேண்டுமானால், அரசு தனது சொந்த வரி வருவாயைப் பெருக்க வேண்டும் அல்லது புதிய வரிகளை விதிக்க வேண்டிய நிலை ஏற்படும். அதேபோல் மக்கள் நலத்திட்டங்களுக்கு அதிகப் பணம் செலவிடப்படும்போது, சாலைகள், பாலங்கள், மருத்துவமனைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைய வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க வேண்டும் என்றால், அரசு பணம் கொழிக்கும் அத்தனை துறையிலும் கை வைக்கும்.
பாதி வெற்றி தான்
உதாரணத்திற்கு மதுபானம் உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பேருந்து கட்டணம் உயர்வு போன்ற பல்வேறு வழிகளை பின்பற்றும். அதேபோல் மதுபான விற்பனையை அதிகரித்து பணத்தை திரட்டவும் அதிக திட்டங்களை அரசு வகுக்கும். அதேபோல் அரசு குவாரிகளை கையகப்படுத்தி முறைப்படுத்தி சம்பாதிக்கவும் திட்டமிடும். மத்திய அரசிடமும் நிதி ஆதாரங்களை அதிகம் பெற முயற்சிக்கும். இதில் ஓரளவு வெற்றி பெற்றால், பாதி அளவு வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். ஆனால் முழுயைமாக எந்த கட்சியாலும் நிறைவேற்றுவது என்பது தற்போதைய நிதி சூழலுக்கு சாத்தியமே இல்லை.
