12 ஆம் நூற்றாண்டின் கங்கர் கலையமைதியில் புலிக் குத்திப் பட்டான் கல் கண்டுபிடிப்பு .!
கிருஷ்ணகிரி

12 ஆம் நூற்றாண்டின் கங்கர் கலையமைதியில் புலிக் குத்திப் பட்டான் கல் கண்டுபிடிப்பு
கிருஷ்ணகிரி அருங்காட்சியகம் , பள்ளிக்கல்வித்துறை, கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு இணைந்து 12, 13 ஆம் நூற்றாண்டுகளில் ஒய்சாளர்களின் ஆட்சிக் காலத்தில்
கர்னாடகம், தமிழகத்தின் பகுதிகளைக் கொண்ட குந்தாணி ராஜ்ஜியம் சிறப்புற்று இருந்தது .
இந்த ராஜ்ஜியத்தின் ஆதாரங்களைத் தேடி அளேகுந்தாணி ஊரில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அளேகுந்தாணியைச் சேர்ந்த சீத்தாராமன் என்பவர் ஊரின் கிழக்கு பக்கம் சாக்கியம்மாள் கோயில் இருப்பதாகவும்
அதன் அருகே நடுகல் இருப்பதாகவும் கூறி அங்கு அழைத்துச் சென்றார்.
அந்த இடத்தில் ஒரு நடுகல் வீடு இருந்து மரம் வளர்ந்ததாலும் சாலை விரிவாக்கத்தின் போதும் ஏற்பட்ட மாற்றங்களால் நடுகல் வீடு இடிந்து நடுகல் மண்ணல் பாதி மூடப்பட்டு இருந்தது.
ஊர் கவுண்டர் சங்கரன் உதவியுடன் அந்த நடுகல்லை வெளியில் எடுத்தோம். இந்த நடுகல் பற்றி கல்வெட்டு காவலன் கோவிந்தராஜ் கூறும் போது. குந்தாணி ராஜ்ஜியத்தை நினைவுப்படுத்தும் வண்ணம் இந்த ஊரின் பெயர் அளே குந்தாணி என்று இருந்ததால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெயருக்கு ஏற்ப இந்த இடத்தில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கங்கர் கலை அமைதியில் நடுகல் கிடைத்துள்ளது தலைப்பாகை, முக, உடல் மற்றும் ஆடை அலங்கார அமைப்புகளைக் கொண்டு இது கங்கர்கள் கலை அமைதி என்று கூறலாம்.
இது புலிக்குத்திப்பட்டான் கல். முல்லைநிலப்பகுதியான காடும் காடுசார்ந்த பகுதியாக இருந்ததால் மக்கள் வளர்க்கும் கால்நடைகளை இரையாக்கிக் கொள்ள புலிகள் வருவதும் இயல்பே. அப்படி ஒரு நேரத்தில் ஊரையும் கால்நடைகளையும் காக்கும் பொருட்டு காவலில் இருந்தவன் புலியோடு போராடி இருக்கிறான். ஒரு கையில் வாளும் ஒருகையில் கடாரி எனப்படும் குறுவாளும் வைத்து போராடும் போது புலியின் வாய்பகுதியில் குறுவாளை குத்தியிருக்கிறான். இந்த சண்டையயில் புலியும் புலியோடு போராடிய காவலனும் இறந்து விட்டனர்.
ஊரையும் கால்நடைச் செல்வங்களையும் காப்பாற்ற உயிரை விட்டதால் அவனுக்கு நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. கணவன் இறந்த பின் உயிர் வாழ பிடிக்காத அவன் மனைவி உடன்கட்டை ஏறி உயிர் துறப்பதை குறிக்கும் வண்ணம் ஒரு கையை மேலே தூக்கி காட்டியும் ஒருகையில் குடுவையை ஏந்தியபடியும் வடித்திருக்கிறார்கள்.
தீ பாய்ந்து உயிர் விட்டதால் அவர்கள் வழி வந்தவர்கள் இந்த நடுகல் வீட்டை சாக்கியம்மாள் என்ற பெண் தெய்வமாக்கி வழிபாடு செய்து வந்திருக்கின்றனர். இந்த நடுகல் வீடு இடிந்த பின்னும் தற்போதய கிராமத்தினர் இந்த நடுகல்லுக்கு அருகே சாக்கியம்மாள் கோயில் கட்டி வழிபட்டு வருகின்றனர்.
இந்த நடுகல்லை பாதுகாத்து மீண்டும் புரணமைக்க ஊராரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வுப்பணியில் ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், பாலாஜி , விஜயகுமார், ஊர்மக்கள் வெங்கடேசப்பா, பைரப்பன், சீதாராமன் ஆகியோர் உதவினர் .
செய்தியாளர்
மாருதி மனோ