தொகுதி ஒதுக்கீட்டுக்குப் பிறகும் காங்கிரஸில் கலகம்: யார் பெரிய தலை?

காங்கிரஸ்

தொகுதி ஒதுக்கீட்டுக்குப் பிறகும் காங்கிரஸில் கலகம்: யார் பெரிய தலை?

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாக மாறியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் கருத்து முரண்பாடுகள் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 10 ஆண்டுகளாக திமுக - காங்கிரஸ் கூட்டணி பெரிய பிரச்சினைகள் இல்லாமல் இருந்து வந்தாலும், இந்த முறை தொகுதி பங்கீடு தொடர்பாக கடும் இழுபறி ஏற்பட்டது. கடந்த தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ், இந்த முறை 40 தொகுதிகள் மற்றும் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைத்தது. இதனால் பேச்சுவார்த்தை நீண்ட காலம் நீடித்தது.

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேரடியாக களத்தில் இறங்கி, சோனியா காந்தியுடன் ஆலோசித்து கூட்டணியை உறுதி செய்ததாக கூறப்படுகிறது. இறுதியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இதற்கிடையில் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக இருக்கும் கிரிஷ் சோடங்கர் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக எந்த தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற விவகாரத்தில் கட்சிக்குள் இரண்டு தரப்புகள் உருவாகியுள்ளன.

சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற ஆலோசனையில், சிலர் திமுக தோல்வி அடைய வாய்ப்புள்ள தொகுதிகளை கூட்டணியில் தள்ளிவிடும் அபாயம் இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் செல்வப் பெருந்தகை ஆதரவாளர்கள், திமுக வலுவாக இருக்கும் இடங்களையும், அதிமுக பலவீனமாக இருக்கும் தொகுதிகளையும் தேர்வு செய்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் என வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சில தலைவர்கள் தனியாக சர்வே நடத்தி, காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியலை தயார் செய்து வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த பட்டியலை அடிப்படையாகக் கொண்டு கிரிஷ் சோடங்கர் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் பல முக்கிய தலைவர்கள் தங்கள் ஆதரவாளர்களுக்கு சீட் பெறுவதற்காக செல்வப் பெருந்தகையை அணுகி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் கூட்டணி தொடர்பான இறுதி முடிவை கிரிஷ் சோடங்கரே எடுக்க வேண்டும் என கட்சிக்குள் ஒரு தரப்பு வலியுறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த உள்கட்சி மோதல் தற்போது டெல்லி காங்கிரஸ் மேலிடம் வரை சென்றுள்ளது என்றும், அங்கிருந்து விரைவில் தீர்வு காணப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன