அண்ணாமலை குறித்து புகார் கடிதம்.! ஹெச் ராஜா மறுப்பு.!

அரசியல்

அண்ணாமலை குறித்து புகார் கடிதம்.! ஹெச் ராஜா மறுப்பு.!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் பல்வேறு நிறுவனங்களை மிரட்டி பணம் பறிப்பதாகவும், அதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஹெ.‌ராஜா டெல்லி தலைமைக்கு கடிதம் எழுதியதாக கடிதம் ஒன்று வைரலான நிலையில் அதற்கு

ஹெச்.ராஜா மறுப்பு கூறியுள்ளார்.

ஹெச். ராஜா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு எழுதியதாக கூறப்படும் கடிதத்தில், "பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்ததற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு பெரிய கவுரவம், தமிழ்நாட்டில் பாஜகவின் மதிப்பு மற்றும் பார்வையை நிலைநிறுத்துவதில் நான் உறுதியாக இருக்கிறேன். எனது பதவிக் காலத்தில், தலைவர்கள், அலுவலகப் பணியாளர்கள், பணியாளர்கள் ஆகியோருடன் நான் மாநிலம் முழுவதும் விரிவாகப் பயணம் செய்துள்ளேன். பாஜகவின் அடித்தளத்தை வலுப்படுத்தவும், எங்கள் தளத்தை விரிவுபடுத்தவும் நான் விடாமுயற்சியுடன் உழைத்தேன், இதன் விளைவாக லட்சக்கணக்கான புதிய உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தனர். எனது தொடர்புகளில் நம்பகமான ஆதாரங்களால் பகிரப்பட்ட சில தகவல்களை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும் என நினைக்கிறேன். KG குழுமம், நாயுடு சமூகத் தலைவர்கள் மற்றும் பண்ணாரி குழுமத்தைச் சேர்ந்த ஸ்ரீ எஸ்.வி.பாலசுப்ரமணியம் போன்ற தனிநபர்கள் மற்றும் குமரகுரு கல்லூரிகள் போன்ற நிறுவனங்களிடமிருந்து பணம் பறிப்பதில் தற்போதைய தமிழ்நாடு மாநிலத் தலைமை ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதில் ஸ்ரீ ரவி சாம் மற்றும் ஸ்ரீ கே.ஜி. அனுஷ் போன்ற இடைத்தரகர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணங்களுக்காகவும், திண்டுக்கல் ஸ்ரீ அண்ணாமலையார் சேம்பர்ஸில் முதலீடுகளுக்காகவும் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அங்கு நம் தலைமையின் குடும்ப உறுப்பினர்கள் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், கட்சியின் நற்பெயருக்குக் கேடு விளைவித்து, மக்களின் நம்பிக்கையை சிதைத்துவிடும். இந்த விவகாரத்தை முழுமையாக விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மீண்டும், தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி மற்றும் வெற்றிக்காக அயராது உழைக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றும் வாய்ப்புக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

https://x.com/HRajaBJP/status/1879945711703228677?t=fLZtkWw-8w33nLt-EHR-xw&s=19

இந்நிலையில் இக்கடிதம் போலியானது என தனது எக்ஸ் தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள ஹெச்.ராஜா, "என் பெயருக்கு களங்கம் வரவைக்கும் வகையில், சமூக விரோதிகளால் தவறான தகவல்கள் (FAKE NEWS) சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது. இந்த போலி தகவலை தயார் செய்து பரப்பிய நபர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த பொய்யான தகவலை யார் பரப்பினாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என பதிவிட்டுள்ளார்.