எடப்பாடி பழனிசாமி ஆட்சியை நான்தான் காப்பாற்றிக் கொடுத்தேன்! எனக்கே சீட் இல்லை! தனபால் குமுறல்.!
அவிநாசி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நான்தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை காப்பாற்றி கொடுத்தேன்.
அப்படிப்பட்ட எனக்கே சீட் கொடுக்கவில்லை என அவிநாசியின் சிட்டிங் எம்எல்ஏவும், முன்னாள் சபாநாயகருமான தனபால் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: அவிநாசி தொகுதியில் போட்டியிட நான் விருப்பனு அளித்திருந்தேன். ஆனால் அவிநாசி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. இந்த தகவலை கூட கட்சி சார்பில் என்னை அழைத்து சொல்லவே இல்லை.
அவிநாசி போய்விட்டதால் வேறு தொகுதியில் போட்டியிடுகிறீர்களா என்று கூட அவர்கள் என்னை கேட்கவில்லை. சிட்டிங் எம்எல்ஏ, முன்னாள் சபாநாயகரான எனக்கு சீட் வழங்கவில்லை, எனக்கு மரியாதையும் கொடுக்கவில்லை.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்ததும் தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய போது அவர்களை தகுதி நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை நான்தான் காப்பாற்றிக் கொடுத்தேன். அப்படிப்பட்ட எனக்கே சீட் கொடுக்கவில்லை என்று தனது மனக்குமுறலை கொட்டியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி (தனி) தொகுதியில் எம்எல்ஏவாக இருப்பவர் அதிமுகவை சேர்ந்த தனபால். இவர் முன்னாள் சபாநாயகராகவும் இருந்தார். இவரது மகன் லோகேஷ் தமிழ்ச் செல்வன்.
இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த நிலையில் தனபாலுக்கு அவ்வப்போது உடல்நிலை சரியில்லாமல் போவதால், தொகுதி பக்கமே வருவதில்லையாம்.
தனபால் எங்கே என கேட்டு அந்த தொகுதி மக்கள் போஸ்டர் ஒட்டாத குறையாக அதிருப்தியில் இருக்கிறார்களாம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அத்திக்கடவு- அவிநாசி திட்டம் தொடர்பான அதிமுக பாராட்டு விழாவில் மட்டும் தனபால் கலந்து கொண்டாராம். அதன் பிறகு தொகுதி பக்கம் தலை வைத்து கூட படுப்பதில்லை என்கிறார்கள் தொகுதி மக்கள்.
இந்த நிலையில் தனபால் செயல்படாமல் உள்ளதாலும், கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பதாலும் வரும் தேர்தலில் அதிமுக சார்பில் களம் காணும் வேட்பாளருக்கு வெற்றி உறுதி என்றார்கள்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் முயற்சித்து வந்தார். அவர் அதிமுக சார்பில் விருப்பமனுவையும் கொடுத்திருந்தார். ஆனால் அவருக்கு சீட் வழங்கக் கூடாது என பலர் போர்க் கொடி உயர்த்தி, அதை தலைமைக்கே கொண்டு சென்றுவிட்டனராம்.
அதிமுகவில் ஐடி விங்கில் இருந்த லோகேஷ், அவிநாசி தொகுதி பொறுப்பாளராகவும் எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணைச் செயலாளராகவும் இருந்து வந்தார். லோகேஷ் மீது புகார் சென்றதால் அவருக்கு சீட் கிடைக்காது என்றே சொல்லப்பட்டது. இதையடுத்து தனது அப்பாவுக்கு மரியாதை இல்லை, அவர் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட போது கூட கட்சி சார்பில் யாரும் வந்து பார்க்கவில்லை என குற்றச்சாட்டுகளை முன்வைத்த லோகேஷ், தவெகவில் இணைந்துவிட்டார்.
அவர் ராசிபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த சூழலில்தான் அவிநாசியில் தனக்கு சீட் கொடுக்கவில்லை என தனபால் குற்றம்சாட்டியுள்ளார்.
