இந்தியா கூட்டணிக்கு தலைவராகும் மம்தா பானர்ஜி.!

I N D I A

இந்தியா கூட்டணிக்கு தலைவராகும் மம்தா பானர்ஜி.!

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம், திமுக, விசிக உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி, இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைப் பெற்றது. 

இதனையடுத்து, சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டமன்றத் தேர்தல்களில் இந்தியா கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்தது. இந்த தொடர் தோல்விகள், அந்த கூட்டணி தலைவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சூழ்நிலையில், இந்தியா கூட்டணியைத் தலைமை தாங்க தயாராக இருப்பதாக என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார். இது கூட்டணிக் கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இருந்த போதிலும், மம்தா பானர்ஜியின் இந்த பேச்சுக்கு, இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சி, சரத் பவாரின் சரத்சந்திர பவார் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்தன. இந்தியா கூட்டணியில் இடம்பெறாத ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும் கூட, மம்தா பானர்ஜியின் கருத்தை ஆதரவு அளித்தது. தற்போது வரை இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு, புதிய தலைமையாக மம்தா பானர்ஜியை கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்து வருவது காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மம்தா பானர்ஜியை தலைவராக்கும் விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பிக்கள் எந்தவித கருத்துக்களுக்கும் தெரிவிக்கக் கூடாது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அவர், காங்கிரஸ் எம்.பிக்களிடம் கூறியதாவது, "இந்தியா கூட்டணியின் தலைமை பொறுப்பு குறித்துப் பேசி வரும் மற்ற எதிர்க்கட்சிகளின் நடுத்தர மற்றும் கீழ்நிலை தலைவர்களின் கருத்துக்களுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம். எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரஸ் மிகப்பெரிய கட்சியாக உள்ளது. கூட்டணியில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் கொண்டது" என்று கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது