மைசூர் மகாராஜா வாரிசுகளுக்கு ரூ. 3000 கோடி வழங்க கர்நாடக அரசுக்கு உச்சநீதி மன்றம் கெடு.!
Mysore

பெங்களூரு: மைசூர் மகாராஜாவின் சட்டபூர்வ வாரிசுகளுக்கு டி டி ஆர் எனப்படும் பரிமாற்றத்தக்க மேம்பாட்டு உரிமைகள் சான்றிதழ்களில் 3,000 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குமாறு கர்நாடகா அரசுக்கு உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது கர்நாடக அரசுக்கு ஏற்பட்ட பின்னடைவாக பார்க்கப்படுகிறது.பெங்களூரில் உள்ள ஜெயமஹால் சாலை மற்றும் பெல்லாரி சாலை அருகே உள்ள 15 ஏக்கர் மற்றும் 39 குண்டாஸ் நிலங்களை கையகப் படுத்தியதற்காக கர்நாடக அரசு மைசூர் மகாராஜாவின் குடும்பத்திற்கு இந்த இழப்பீட்டை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா அரசுக்கு இந்த உத்தரவை செயல்படுத்துவதற்கு ஆறு வார காலம் கெடு வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
ஜெயமஹால் சாலை மற்றும் பெல்லாரி சாலை அருகே உள்ள 15 ஏக்கர் மற்றும் 39 குண்டாஸ் நிலங்கள் மைசூர் மகாராஜாவின் குடும்பத்திற்கு சொந்தமானது. இதனை கையகப்படுத்த அரசு சொற்பமான தொகையையே வழங்க முன்வந்தது. பெங்களூருவில் நிலங்கள் மிக டிமாண்ட்டாக இருக்கும் பகுதியில் ஒரு சதுர மீட்டருக்கு 120 ரூபாய் என வழங்க கர்நாடக முன் வந்தது.இந்நிலையில் கர்நாடக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதில் மைசூர் மகாராஜாவின் குடும்பத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவின் அடிப்படையில் அருகில் உள்ள பகுதிகளில் தற்போது இருக்கும் சந்தை விகிதங்களின் அடிப்படையில் மைசூர் அரண்மனைக்கு சொந்தமான இந்த நிலத்திற்கு வழிகாட்டு மதிப்பை தீர்மானிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிலத்திற்கான விலையை மதிப்பீடு செய்வதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக சமூக ஆர்வலர்களும் கர்நாடக ராஷ்டிர சமிதி கட்சியினரும் புகார் கூறுகின்றனர். அரசு இதில் நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.