காட்பாடி கிங்ஸ்டன் கல்லூரியில் சிக்கிய பணம்: வெள்ளை வேனில் பாதுகாப்புடன் அனுப்பிவைப்பு.!

வேலூர்

காட்பாடி கிங்ஸ்டன் கல்லூரியில் சிக்கிய பணம்: வெள்ளை வேனில் பாதுகாப்புடன் அனுப்பிவைப்பு.!

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீடு உள்ளது. இவரது மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதி எம்பியாக உள்ளார். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். அமைச்சர் துரைமுருகன் தற்போது சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் உள்ளார். கதிர் ஆனந்த் குடும்பத்துடன் விடுமுறைக்காக துபாய் சென்றுள்ளார். அவர் வரும் 7-ம் தேதி இந்தியா வருகிறார்.

இந்நிலையில், துரைமுருகன் வீடு மற்றும் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் கதிர் ஆனந்த்தின் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்டு வரும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி மற்றும் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீடு உள்ளிட்ட நான்கு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சிஆர்பிஎப் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை சோதனையை தொடங்கினர்.

இதில், அமைச்சர் துரைமுருகன் வீட்டில் யாருமே இல்லாத நிலையில் 7 மணி நேரம் அமலாக்கத் துறை அதிகாரிகள் காத்திருந்தனர். பின்னர், துபாயில் இருந்தபடி தனது பிரதிநிதிகள் முன்னிலையில் சோதனை தொடர, மின்னஞ்சல் மூலம் சென்னை அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு கூறியிருந்தார். அதன்படி, கதிர் ஆனந்தின் பிரிதிநிதிகளான வன்னியராஜா, சுனில்குமார், வழக்கறிஞர் பாலாஜி முன்னிலையில் நேற்று பகல் 2 மணியளவில் சோதனையை அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடங்கினர். 

இந்தச் சோதனை நள்ளிரவு 1.30 மணிக்கு முடிவுற்றது. பூஞ்சோலை சீனிவாசன் தொடர்புடைய இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சில ஆவணங்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதேநேரம், கிங்ஸ்டன் கல்லூரியில் மட்டும் நேற்று காலை தொடங்கிய சோதனை 24 மணி நேரத்தை கடந்து இன்றும் (டிச.4) தொடர்கிறது.

வீட்டில் ரூ.8 லட்சம்: அமைச்சர் துரைமுருகன் வீட்டில் சுமார் 11 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் வீட்டில் பல்வேறு பகுதிகளில் சிறிது சிறியதாக வைத்திருந்த மொத்தம் ரூ.8 லட்சம் பணம் இருந்தது. துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி, கதிர் ஆனந்த் அவரது மனைவி சங்கீதா ஆகியோர் வருமானவரி கணக்கை தாக்கல் செய்து வருவதுடன் ஒரு நபர் ரூ.2 லட்சம் அளவுக்கு கையிருப்பு தொகையாக வைத்திருக்கலாம் என்பதால் அமலாக்கத்துறையினர் அந்தப் பணத்தை கைப்பற்றாமல் அந்த இடத்திலே வைத்துவிட்டனர்.

இந்த சோதனையில் அமைச்சரின் அறை மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரியின் அறை மட்டும் பூட்டியிருந்தது. அதன் மாற்று சாவி இல்லாத நிலையில் இரண்டு அறைகளை சோதனை செய்தே தீர வேண்டும் என அதிகாரிகள் பிடிவாதம் காட்டினர். பின்னர், அறையின் கதவை உடைத்தாவது திறக்க வேண்டும் என கூறியதால் அந்த தகவலை சோதனையின்போது உடனிருந்த திமுக பிரமுகர்கள் அமைச்சரிடன் தெரிவித்துள்ளனர்.

வேறு வழியில்லாத நிலையில் அமைச்சரின் அனுமதிக்கு பிறகு அந்த இரண்டு அறைகளின் பூட்டையும் முருகன் என்பவரது உதவியுடன் உளி, சுத்தியலை பயன்படுத்தி உடைத்தனர். இரண்டு அறைகளின் சோதனை முடிந்த இரண்டு மணி நேரம் கழித்தே அமலாக்கத் துறை அதிகாரிகள் அமைச்சரின் வீட்டில் இருந்து புறப்பட்டுச்சென்றனர்.

வெள்ளை வேனில் பணம்: கிங்ஸ்டன் பொறியில் கல்லூரியில் நடைபெற்ற சோதனையின் ஒரு பகுதியாக அமலாக்கத்துறை அதிகாரகளுக்கு உதவியாக வெள்ளை வேனில் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் பணம் எண்ணும் இயந்திரத்துடன் துப்பாக்கி ஏந்திய வங்கி பாதுகாவலர்களுடன் வந்தனர். இந்த வாகனம் மீண்டும் பாதுகாப்புடன் நள்ளிரவு அங்கிருந்து சென்றது. இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, "கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி என்பதால் பணம் இருந்தது. அந்த பணத்தை வங்கி அதிகாரிகள் உதவியுடன் சரிபார்த்து எஸ்பிஐ வங்கியில் உள்ள அமலாக்கத்துறையின் கணக்கில் வரவு வைத்துள்ளனர்.

அந்த பணத்துக்கு நிர்வாக தரப்பில் கணக்கு காட்டிவிட்டு திரும்பப் பெறலாம் என்பதால் அந்த பணம் குறித்த விவரம் வெளியிடவில்லை. அங்கு பெரிய தொகைதான் சிக்கியுள்ளது. மற்றபடி கல்லூரியில் உள்ள ஆவணங்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் இருந்து ரூ.28 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.' என்றனர்.

இந்த சோதனை தொடர்பாக திமுக நிர்வாகிகள் தரப்பில் விசாரித்தபோது, '2019 தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு கொடுக்க முயன்றதாக ரூ.11.51 கோடி பணம் பறிமுதல் தொடர்பான விசாரணையை பூஞ்சோலை சீனிவாசனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 மாதங்களுக்கு முன்பே மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கேட்ட அனைத்து விவரங்களும் கொடுத்துவிட்டார்கள். இப்போது வீட்டுக்கே வந்துள்ளார்கள்.' என்றனர்.