தேஜஸ்வி தான் முதல்வர்.. காலியாகும் நிதிஷ் குமார்.. அப்போ பிரசாந்த் கிஷோர்? சர்வேக்கள் சொல்வது என்ன ?

பீகார்

தேஜஸ்வி தான் முதல்வர்.. காலியாகும் நிதிஷ் குமார்.. அப்போ பிரசாந்த் கிஷோர்? சர்வேக்கள் சொல்வது என்ன ?

பீகார் தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கும் சூழலில், அங்குத் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்து வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க அங்கு முதல்வர் வேட்பாளராக யாருக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் பல சர்வேக்களில் நிதிஷ்குமாரை ஓவர்டேக் செய்து தேஜஸ்வியே முதலிடத்தில் இருக்கிறார்.

பீகார் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் 'மகாபந்தன்' கூட்டணி ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது. அந்தக் கூட்டணியில் உள்ள விகாஷீல் இன்சான் கட்சி (VIP) தலைவர் முகேஷ் சஹானி துணை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முதல்வர் வேட்பாளர்

அதேநேரம் என்டிஏ கூட்டணியில் இதுவரை முதல்வர் வேட்பாளராக யாரும் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் முடிந்த பிறகு எம்எல்ஏக்கள் இணைந்து முதல்வரை தேர்வு செய்வார்கள் என மட்டும் கூறினார். பிரதமர் மோடி பீகார் பிரச்சாரத்தில் நிதிஷ்குமாரை பாராட்டினாலும்கூட, நிதஷ் தான் முதல்வர் வேட்பாளர் என வெளிப்படையாகக் கூறவில்லை.

தேஜஸ்வி யாதவ்

அங்கு பிரச்சாரங்கள் இதுபோல தீவிரமாக இருக்கும் சூழலில், மற்றொரு பக்கம் கருத்துக் கணிப்புகளும் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது. அதில் முதல்வர் வேட்பாளர் குறித்த கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலும் தேஜஸ்வி யாதவுக்கு தான் ஆதரவு அதிகமாக இருக்கிறது. மாதம் வெளியான C-Voter கருத்துக்கணிப்பில், தேஜஸ்வி யாதவ் தான் முதல்வர் பதவிக்கான முதல் தேர்வாக இருந்தார். அந்த சர்வேயில் 35.5% பேர் தேஜஸ்வியை தேர்ந்தெடுத்தனர்.

ஜன சூரஜ் கட்சியின் நிறுவனரும் முன்னால் தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் 23% வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்தார். கடந்த 10 ஆண்டுகளாக பீகாரின் முதலமைச்சராக இருக்கும் நிதிஷ் குமாருக்கு வெறும் 16% பேர் ஆதரித்தனர்..

கருத்துக் கணிப்புகள்

மறுபுறம் ஜேவிசி கருத்துக்கணிப்பில், நிதிஷ் குமார் மற்றும் தேஜஸ்வி இடையே கடும் போட்டி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 27% பேருடன் நிதிஷ் குமாருக்கு ஆதரவு கொடுத்திருந்த நிலையில், அதைவிடச் சற்று குறைவாக 25% பேர் தேஜஸ்வி யாதவ்வுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதேபோல வோட்டர் வைஃப் நடத்திய சர்வேயிலும் தேஜஸ்வி யாதவிற்கு தான் ஆதரவு அதிகமாக இருந்தது.. அந்த சர்வேயில் 35% பேர் தேஜஸ்வி யாதவை ஆதரித்தனர்.. நிதிஷ் குமாருக்கு 23.4% பேரும், பிரசாந்த் கிஷோருக்கு 13.8% பேரும் ஆதரவு அளித்தனர்.

இதில் நாம் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். சட்டசபைத் தேர்தலில் தேஜஸ்வி மட்டுமே நேரடியாகப் போட்டியிடுகிறார். அவர் ஆர்ஜேடி கோட்டையாகக் கருதப்படும் ரகோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதேநேரம் நிதிஷ்குமார் இந்தத் தேர்தலில் போட்டியிட மாட்டார். ஏனென்றால் பீகாரில் எம்எல்சி சட்ட மேலவை இருக்கிறது. ஒருவர் எம்எல்சியாக இருந்தாலே முதல்வராக இருக்க முடியும். கடந்த 2005 முதலே நிதிஷ்குமார் எம்எல்சியாகவே இருக்கிறார். எனவே, இந்த முறையும் அதுவே தொடரப் போகிறது.

பிரசாந்த் கிஷோர்

அதேபோல பிரசாந்த் கிஷோர் பீகார் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தார். அதேநேரம் அவரது ஜன் சூரஜ் கட்சி பீகாரின் அனைத்து 243 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. தேர்தலில் போட்டியிட்டால் ஒரு தொகுதியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். அப்படியில்லை என்றால் மாநிலம் முழுக்க கவனம் செலுத்தலாம் என்பதே இதற்குக் காரணம். ஒருவேளை ஆட்சியை அமைத்தாலும் எம்எல்சி ஆப்ஷன் இருப்பதால், நிதிஷ் பாணியில் பிரசாந்த் கிஷோர் தேர்தலில் போட்டியிடவில்லை.

பீகார் சட்டமன்றத் தேர்தலானது நவம்பரில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். தேர்தல் முடிவுகள் நவம்பர் 14ம் தேதி அறிவிக்கப்படும். தேர்தலில் போட்டியிடும் முக்கிய கூட்டணிகளாக என்.டி.ஏ மற்றும் மகாபந்தன் உள்ளன. பிரசாந்த் கிஷோரின் ஜன் சூரஜ் புதிய கட்சியாகத் தனித்துக் களமிறங்குகிறது.

கூட்டணிகள்

ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான மகாபந்தன் கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விகாஷீல் இன்சான் கட்சிகள் உள்ளன. மறுபுறம் ஆளும் என்.டி.ஏ கூட்டணியில் பாஜக, ஜேடியு, லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற), ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா ஆகியவை உள்ளது குறிப்பிடத்தக்கது.