டெல்லி கத்தோலிக்க தலைமையகத்தில் கிறிஸ்மஸ் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டதன் பார்வை.! ஜெபசிங் அறிக்கை.!
இந்தியா

டெல்லி கத்தோலிக்க தலைமையகத்தில் கிறிஸ்மஸ் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டதன் பார்வை.!
டாஸ் மாநில பொதுச்செயலாளர் ஜெபசிங் அறிக்கை.!
கிறிஸ்தவர்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் பண்டிகை கிறிஸ்து பிறப்பு திருநாள். இந்தியாவில் சுமார் 3 கோடி கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். (2.3%) சிபிசிஐ என்பது இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் கூட்டமைப்பு ஆகும். அண்மையில் டெல்லியில் சிபிசிஐ ஒருங்கிணைத்த கிறிஸ்து பிறப்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார். இந்த கூட்டமைப்பு நடத்தும் கிறிஸ்து பிறப்பு விழாவில் நாட்டின் பிரதமர் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக கருதப்பட்டாலும் இந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றியது பெரும் விமர்சனங்களை பெற்றுள்ளது.
இந்தியாவில் பல்வேறு இடங்களில் குறிப்பாக உபி, மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் தனிப்பட்ட முறையில் திருச்சபை நடத்தும் போதகர்கள், திருச்சபைகளுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல், கிறிஸ்தவ நிறுவனங்கள் மீது தாக்குதல், கல்லறைகள் உடைப்பு, போன்ற நிகழ்வுகளில் வலது சாரி அமைப்புகளின் ஈடுபாட்டையும் மற்றும் மணிப்பூரில் கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாடுகிற சூழ்நிலை நிலவுகிறதா? போன்ற எண்ணற்ற கேள்விகளையும் எழுப்புகிறது.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களை விட, நூறு மடங்கு தனிப்பட்ட திருச்சபையினர் எதிர்கொள்ளும் வன்முறைகள் தான் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிரதமர் இத்தாலி பயணத்தின் போது போப் அவர்களை சந்தித்த பிறகு கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காட் அவர்களை போப் பிரான்சிஸ் இந்தியாவின் கர்தினாலாக அண்மையில் பதவி உயர்த்தப்பட்டிருக்கிற சமயத்தில் பிரதமர் மோடி கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது அரசியல் ஆதாயங்களை தேடி தருமா? என்ற கோணத்திலும் விமர்சனங்கள் எழுகின்றன.
2024 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கேரளாவில் பாஜகவின் வாக்கு சதவீதம் படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில் இந்த நிகழ்ச்சி மூலம் பாஜக தனது வாக்கு வங்கியை விரிவுபடுத்தும் உத்தியாக இருக்கலாம் என்ற கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன.
பிரதமர் மோடி பல்வேறு முஸ்லீம் தலைவர்களையும் சந்தித்திருக்கிறார். கடந்த ஆண்டு துபாயில் ஒரு மசூதிக்கு அருகில் இந்து கோவில் திறக்கப்பட்டது. அதே சமயம் இந்தியாவில் கோவில் கட்டப்படுவதற்காக மசூதிகள் இடிக்கப்பட்டு முஸ்லீம் சமூகத்திற்கு சொந்தமான சொத்துக்கள் கைப்பற்றப்பட்டன. இது போல் கிறித்தவர்களுக்கும் நடப்பது மட்டும் விதிவிலக்கல்ல.
முஸ்லீம் சமூகத்தினர் எவ்வாறு வன்முறை தாக்குதல்களுக்கு உட்படுத்தப்படுகிறார்களோ அதே போல கிறித்தவ சமூகத்தின் பல்வேறு பிரிவினர் எதிர்கொள்ளும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.. எனவே பிரதமர் மோடி விருத்தினராக கலந்து கொண்டிருக்கும் இந்த கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி இந்திய நாட்டின் அனைத்து சிறுபான்மையினரின் நலனுக்காக குரல் எழுப்பி, கிறிஸ்தவ கோட்பாடுகளான அன்பு, சகோதரத்துவம், சகிப்புத்தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வேற்றுமையில் ஒற்றுமை காணும் இடமாக இந்தியா உறுமாற கத்தோலிக்க ஆயர் பேரவை முயற்சி எடுக்க வேண்டும் என தமிழ்நாடு திருச்சபை பணியாளர்கள் நல தொழிற்சங்கம் மாநில பொதுச் செயலாளர் ஜெபசிங் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.