டிரம்ப் வந்துட்டாரே.. வந்து விழுந்த கேள்வி.. ஈரான் சொன்ன பதில்! மத்திய கிழக்கில் அடுத்து என்ன?

டிரம்ப் வந்துட்டாரே.. வந்து விழுந்த கேள்வி.. ஈரான் சொன்ன பதில்! மத்திய கிழக்கில் அடுத்து என்ன?

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்றுள்ளது உலகளவில் கவனிக்க வைப்பதாக இருக்கிறது.. மத்திய கிழக்கில் இப்போது பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அங்கு டிரம்ப் என்ன மாதிரியான நடவடிக்கையை எடுக்கப் போகிறார் என்பதில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்தச் சூழலில் டிரம்ப் வெற்றி தொடர்பாக ஈரான் கூறியுள்ள சில கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் ஒருவழியாக நடந்து முடிந்துவிட்டது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப் மிகப் பெரியளவில் வென்று அமெரிக்காவில் 47ஆவது அதிபரானார்.

அதிபர் தேர்தல்: அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது அந்நாட்டைத் தாண்டி உலகெங்கும் கவனிக்கத்தக்க ஒரு விஷயமாகவே எப்போதும் இருக்கும். ஏனென்றால் அமெரிக்கா எடுக்கும் கொள்கை முடிவுகள் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த முறை டிரம்ப் மத்திய கிழக்கு விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கப் போகிறார். எங்கு நிலவும் போரை முடிவுக்குக் கொண்டு வருவாரா என்பதில் பல குழப்பங்கள் இருக்கிறது.

இந்தச் சூழலில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி குறித்து ஈரான் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. டிரம்பின் வெற்றி என்பது அமெரிக்காவின் கடந்த கால தவறான கொள்கைகளை மறுபரிசீலனை செய்யக் கிடைத்த வாய்ப்பாக இருக்கும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரான் சொல்வது என்ன: இது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாய் மேலும் கூறுகையில், "கடந்த காலங்களில் வெவ்வேறு அமெரிக்க அரசுகளின் கொள்கைகளும் அவர்களின் அணுகுமுறைகளும் எங்களுக்கு மிகவும் கசப்பான அனுபவத்தையே கொடுத்தன. இப்போது டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். முந்தைய அரசின் கொள்கைகளை மறுபரிசீலனை செய்வதற்கான சரியான வாய்ப்பாக இது இருக்கும் என நம்புகிறோம்" என்றார்.

இரு நாட்டு உறவு: கடந்த 1979ம் ஆண்டு ஈரான் நாட்டில் இஸ்லாமியப் புரட்சி நடந்த நிலையில், அப்போது முதலே ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பகை தான் இருந்து வருகிறது. இருப்பினும், நேரடி மோதல்கள் பெரியளவில் இல்லாமலேயே இருந்தது. ஆனால், டிரம்ப் அதிபராக இருந்த 2017 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் உச்சத்தில் இருந்தது.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு வரை, அது குறித்து ஈரான் பெரியளவில் கருத்துச் சொல்லவில்லை. யார் அதிபராக வந்தாலும் பொதுவான கொள்கைகள் மாறப் போவதில்லை என்றும் இதனால் அமெரிக்கத் தேர்தல் குறித்து அதிகம் கவலைப்படத் தேவையில்லை என்றும் ஈரான் கூறியிருந்தது.

அதிரடி: டிரம்ப் அதிபராக இருந்த காலகட்டத்தில் ஈரான் உடன் அதிரடியான நடவடிக்கைகளையே எடுத்தார். கடந்த 2015ல் ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக திடீரென அறிவித்தார். மேலும், ஈரான் மீது ஏகப்பட்ட பொருளாதாரத் தடைகளையும் கூட விதித்தார். இது ஈரானை கடுமையாக ஆத்திரப்படுத்தியது.

எல்லாவற்றுக்கும் மேல், கடந்த 2020ல் டிரம்ப் அதிபராக இருந்த போதுதான் ஈராக்கின் பாக்தாத் விமான நிலையத்தில் வான்வழித் தாக்குதலை நடத்தி ஈரான் ராணுவத்தின் ஜெனரல் காசிம் சுலைமானியைக் கொன்றது. இதனால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மோதல் மிக மோமசான நிலைக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.