தமிழ்நாட்டின் முதல்வர் குறித்து அவதூறு: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சிந்தித்து பேச வேண்டும்.! த.வா.க. தலைவர் வேல்முருகன் கண்டனம்.!

தமிழகம்

தமிழ்நாட்டின் முதல்வர் குறித்து அவதூறு: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சிந்தித்து பேச வேண்டும்.! த.வா.க. தலைவர் வேல்முருகன் கண்டனம்.!

தமிழ்நாட்டின் முதல்வர் குறித்து அவதூறு: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சிந்தித்து பேச வேண்டும்

தமிழ்நாடு கல்வித் துறை அமைச்சர் தலைமையில், திமுக எம்.பி.க்கள் தன்னை வந்து சந்தித்து, தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துவிட்டு,

பிறகு யாரோ ஒரு சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு எதிர்ப்பதாக, மக்களவையில் 10.03.2025 அன்று ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருக்கிறார். அதோடு, தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்றும் அவர் பேசியிருக்கிறார். 

புதிய கல்விக் கொள்கை வேண்டுமா? வேண்டாமா? அல்லது மும்மொழி கல்விக்கொள்கை வேண்டுமா? வேண்டாமா? என முடிவு செய்வது அந்தந்த மாநிலங்களின் உரிமையே தவிர, டெல்லியில் அமர்ந்துக் கொண்டு ஒன்றிய அரசோ, அதன் எஜமானர்களோ முடிவு செய்யக்கூடாது. 

இந்திய ஒன்றியத்தில் பல்வேறு தேசிய இடங்கள் உள்ளன. அந்தந்த தேசிய இனங்களுக்கும், தாய்மொழி இருக்கின்றன. அந்தந்த மாநிலங்களில் எந்த சூழிலில் எதனை பயிரிட வேண்டும். எதை பயிரிடக்கூடாது என்பது அந்தந்த மாநில விவசாயிகளுக்கு தெரியும். அது போல தான் கல்விக்கொள்கையும்.  

தமிழ்நாட்டில் படிக்கின்ற மாணவர்களுக்கு என்ன படிக்க வேண்டும். என்ன மொழி கற்க வேண்டும் என்பதை மாநில அரசு தான் முடிவு செய்ய வேண்டும். 

பாஜக ஆளும் மாநிலங்களிலேயே, தங்களின் தாய்மொழி அழிந்து கொண்டிருப்பதாக - இந்தி அதனை அழித்துக் கொண்டிருப்பதாக - அவர்களின் தலைவர்களே சொல்கிறார்கள். மராத்தியத்தில் அந்தக் குரல் இப்போது வெளிப்படையாகக் கேட்கத் தொடங்கி இருக்கிறது. 

மேற்கு வங்கத்தில், பாஜக மாநிலத் தலைவர் திலீப் கோஷ், வங்கம் தொன்மையான மொழி, அதனை விட்டுவிட்டு வங்காளிகள் இந்தியில் பேசலாமா என்று கேட்டிருக்கிறார். வடநாட்டில் போஜ்புரி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மொழிகளை இந்தி அரித்துக் கொண்டும், அழித்துக் கொண்டும் இருக்கிறது. 

இதுபோன்ற ஆபத்து தமிழ்நாட்டிற்கு வந்து விடக்கூடாது என்ற பேரச்சத்தில், புதிய கல்விக் கொள்கை வேண்டாம் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியிருக்கிறார். இதனை புரிந்துக் கொள்ளாமல், யாரோ ஒரு சூப்பர் முதல்வர் என்றும் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்றும் தர்மேந்திர பிரதான் கூறுவது கடும் கண்டத்துக்குரியது. 

தமிழ்நாட்டில் இருந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆண்டிற்கு சுமார் ரூ.3 இலட்சம் கோடிகளை கொள்ளையடித்துச் செல்லும் ஒன்றிய அரசு, தமிழ்நாட்டிற்கு 20 ஆயிரம் கோடிகளைக் கூட வழங்குவதில்லை. இன்னும் சொல்லப்போனால், தமிழ்நாட்டின் வரியில் தின்று கொளுத்து விட்டு, தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசின் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

இந்தித் திணிப்பிற்கு எதிரான மொழிப்போர் தமிழ்நாட்டில் மீண்டும் வராமல் தடுக்கும் பொறுப்பு, ஒன்றிய பாஜக அரசுக்கு இருக்கிறது என்பதை தர்மேந்திர பிரதானுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சுட்டிக்காட்டுவதோடு, தமிழ்நாட்டிற்கு சூப்பர் முதல்வர் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என தனது கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi (MR)