பாக்டீரியா தொழில் நுட்பத்தில் பச்சைக் குளம் தூய்மைப்படுத்தும் பணி துவக்கி வைப்பு.!
கிருஷ்ணகிரி
ஓசூர் மலை கோயில் தேர்த் திருவிழா முன்னேற்பாடுகள் மும்முரம். மாமன்ற உறுப்பினர் கிருஷ்ணவேணி ராஜி மற்றும் அதிமுக ஓசூர் கிழக்குப் பகுதி செயலாளர் ராஜி தலைமையில் பாக்டீரியா தொழில் நுட்பத்தில் பச்சைக் குளம் தூய்மைப்படுத்தும் பணி துவக்கி வைப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் மலைக் கோயிலில் வரும் மார்ச் மாதம் மூன்றாம் தேதி தேர் திருவிழா நடைபெற உள்ளது.
ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் இந்த திருத்தேரோட்ட திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா,கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து பக்தர்கள் லட்சக்கணக்கில் வருகை தருவார்கள்.
இதனால் அவர்களின் வசதியை உறுதிப்படுத்தும் வகையில் இதற்கான முன்னேற்பாடு பணிகள் இப்பொழுதிருந்தே மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் மலை கோயிலுக்கு கீழே "மரகத சரோவரம்", "மரகதக்குளம்" எனப்படும் பச்சைக் குளம் உள்ளது. இங்குள்ள நீர் பல்வேறு காரணங்களால் அசுத்தமடைந்து மாசுபட்டு காணப்படுவதுடன் பக்தர்களின் பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லாமல் போய்விடுகிறது. இதனால் இந்த பச்சை குளத்தை திருவிழா நடைபெறுவதற்கு முன்பு தூய்மைப்படுத்தி வருவார்கள்.
அதன்படி இந்த ஆண்டு ஓசூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் திருமதி கிருஷ்ணவேணி ராஜி மற்றும் அவரது கணவர் அதிமுக ஓசூர் மாநகர கிழக்கு பகுதி செயலாளர் ராஜி ஆகியோர் அவர்களது சொந்த செலவில் பச்சை திருக்குளத்தை தூய்மை செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

அதற்கான பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியில் அதிமுகவைச் சேர்ந்த ஆதி, பாலச்சந்திர, ராஜா, சசி,மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இது பற்றி நம்மிடம் தெரிவித்த ராஜி.....
குளத்தில் உள்ள அசுத்தமான தண்ணீரை தூய்மைப்படுத்த புதிய தொழில்நுட்பத்தில் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக பால் எவ்வாறு தயிராக மாற்றப்படுகிறது, அது போல நுண்ணுயிரிகளை பயன்படுத்தும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ஈஸ்ட் பாக்டீரியா நுண்ணுயிரிகளை நிலத்தடி நீரில் செலுத்தி அதனை இனப்பெருக்கம் செய்து அதிகரித்து அந்தத் தண்ணீரை திருக்குளத்தில் ஊற்றி தூய்மைப்படுத்தும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்தார். இதற்கான முழு செலவையும் அவரே ஏற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்
மாருதி மனோ
