அன்புமணியுடன் தேர்தல் ஆணையமும் இணைந்து செயல்படுவதாக ஜி.கே.மணி குற்றச்சாட்டு. !
பா.ம.க
பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) கடந்த சில மாதங்களாக நிலவி வந்த உள்கட்சிப் பிரச்சினை, தற்போது நேரடியான தந்தை-மகன் மோதல் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கட்சியின் கவுரவத் தலைவரான ஜிகே மணி, இன்று டெல்லியில் அளித்த பேட்டியில், அன்புமணி ராமதாஸ் மற்றும் தேர்தல் ஆணையத்தைக் குற்றம் சாட்டியதால், இந்த பிரச்சனை புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.
அன்புமணி போலி ஆவணங்கள் சமர்ப்பித்தார் - ஜிகே மணி குற்றச்சாட்டு
ஜிகே மணி தனது பேட்டியில், அன்புமணி ராமதாஸ் தேர்தல் ஆணையத்திடம் போலி ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். இந்த போலி ஆவணங்களை ஏற்று தேர்தல் ஆணையமே அன்புமணிக்கு ஆதரவாக செயல்படுகிறது, என்று மிகக் கடுமையாக குற்றம் சாட்டினார். மேலும் அவர், அன்புமணியின் தரப்பில் நடந்த பொதுக்குழு கூட்டங்கள் எல்லாமே சட்டபூர்வமற்றவை, போலியானவை என்றும் கூறினார். பாமகவின் உண்மையான தலைவர் ராமதாஸ் தான், அன்புமணியும், தேர்தல் ஆணையமும் சேர்ந்து எங்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர் என்று தெரிவித்தார். அதற்கான ஆதாரங்கள், தேர்தல் ஆணையத்துக்குப் பலமுறை ராமதாஸால் அனுப்பப்பட்ட கடிதங்களாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்ளகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் இந்த முறை அந்த நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், அதன்பின்னணியில் அன்புமணி தரப்பு தவறான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் ஜிகே மணி குற்றம் சாட்டினார். அன்புமணி மற்றும் தேர்தல் ஆணையத்தின் மோசடிக்கு எதிராக ராமதாஸ் ஆதரவாளர்கள் பெரும் போராட்டம் நடத்த உள்ளனர் என்று அறிவித்தார்.
