வக்ஃப் திருட்டுச் சட்டத்திற்கு முழுவதுமாக தடை விதிக்க வேண்டும் என்பதே முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்பு வெல்ஃபேர் கட்சி தமிழ்நாடு தலைவர் கே எஸ் அப்துல் ரஹ்மான் அறிக்கை. !
வஃபு திருத்த சட்டம்

வக்ஃப் திருட்டுச் சட்டத்தின் சில விதிகளுக்கு இடைக்கால தடையை அல்ல, வக்ஃப் திருட்டுச் சட்டத்திற்கு முழுவதுமாக தடை விதிக்க வேண்டும் என்பதே முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்பு வெல்ஃபேர் கட்சி தமிழ்நாடு தலைவர் கே எஸ் அப்துல் ரஹ்மான் கூறினார்.
வக்ஃப் திருட்டுச் சட்டத்தின் சில பிரிவுகளுக்கு மட்டுமே தடை விதிக்க முடியும் என்று கூறிய உச்ச நீதிமன்றம் மீது வெல்ஃபேர் கட்சி அதிருப்தி தெரிவிக்கிறது.
15.09.2025 அன்று உச்ச நீதிமன்றம் வக்ஃப் திருட்டுச் சட்ட வழக்கில் அளித்துள்ள தீர்ப்பை மேலோட்டாமாக பாரக்கும் போது சற்று ஆறுதலைத் தருவதை போன்று இருந்தாலும், முற்றிலும் நீதிக்கு எதிரான தீர்ப்பாக இது. அமைப்புச் சட்டத்திற்கும் மக்களுக்கும் எதிரான வகையில் நாடாளுமன்றம் நிறைவேற்றிய பல்வேறு சட்டங்களுக்கு எதிராக கேள்வி எழுப்பி, தடை செய்துள்ள நீதிமன்றம் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் அதிருப்தியையும் எதிர்ப்பையும் பெற்றுள்ள வக்ஃப் திருட்டுச் சட்டத்தை அனுமதிப்பது பல ஐயங்களை எழுப்புகிறது. மேலும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான, முஸ்லிம் சமூகத்தின் நில உரிமையை பறிக்கும் ஆபத்தான வக்ஃப் திருட்டுச் சட்டத்தையும் முழுவதுமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோருகிறது.
இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி ஏ.ஜி. மாசிஹ் அடங்கிய இருக்கையானது "தடை வழங்குவது அரிதிலும் அரிதான பிரிவில் மட்டுமே உள்ளது" என்று கூறி முழு சட்டத்தையும் ரத்து செய்ய மறுத்துவிட்டது. மேலும் வக்ஃப் திருட்டுச் சட்டம் 2025, இந்த பிரிவில் வராது எனவும் அவர்கள் கூறியுள்ளனர். வக்ஃப் திருட்டுச் சட்டத்தில் உள்ள சில சட்ட விதிகளுக்கு இடைக்காலத் தடை அளிக்கப்பட்டுள்ளதே தவிர, முழுமையாக ரத்து செய்யப்படவில்லை. இந்தத் தீர்ப்பின் போக்கை பார்க்கும் போது ஒன்றிய அரசின் வக்ஃப் திருட்டுச் சட்டத்தை முழுமையாக நடைமுறைக்கு கொண்டு வருவதை நோக்கிய பயணத்தில் உள்ளதோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்றிய, மாநில வக்ஃப் ஆணையங்களில் முஸ்லிம் அல்லாதவர்களை நியமிக்க அனுமதிக்கும் விதியை நிறுத்தி வைக்காத நீதிபதிகளின் முடிவு பெரும் அதிருப்தியை அளிக்கிறது. இந்து அறநிலைத்துறைகளிலோ சீக்கிய குருத்துவாராக்களிலோ பிற சமயத்தவர்களை அனுமதிக்காத அதே நேரத்தில், 22 உறுப்பினர்களைக் கொண்ட ஒன்றிய வக்ஃப் கவுன்சிலில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களின் எண்ணிக்கையை நான்காகவும், 11 உறுப்பினர்களைக் கொண்ட மாநில வக்ஃப் வாரியங்களில் மூன்றாகவும் மட்டுப்படுத்தி அளித்துள்ள தீர்ப்பு இந்திய அரசியலமைப்புச் சட்டம் முஸ்லிம்களுக்கு அளித்துள்ள உரிமைகளை மீறுவதாகும்.
வக்ஃப் திருட்டுச் சட்டம் 2025 என்பது வக்ஃப் சட்டங்களை பலவீனப்படுத்தி வக்ஃப் சொத்துக்களை அபகரிப்பு செய்வதற்கான ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாகும். இது இந்துத்துவ பயங்கரவாத சக்திகள் முன்னெடுக்கும் முஸ்லிம் இன அழிப்பு கொள்கையின் தொடர்ச்சியாகும் என கே எஸ் அப்துல் ரஹ்மான் கூறினார்
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள் கூறுவது போல இந்த தீர்ப்பு ஒருபோதும் முஸ்லிம்களுக்கு ஆதரவானது அல்ல. வக்பு திருட்டுச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்வது மட்டுமே சரியான தீர்ப்பாக அமையும்.
வக்ஃப் திருட்டு சட்டத்தை முழுமையாக திரும்ப பெறும் வரை மக்கள் திரள் போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தனது அறிக்கையில் கூறினார்.