நம்பிக்கை இழந்துவிட்டேன்.." இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் கேலன்ட் நீக்கம்.. நெதன்யாகு அதிரடி

நம்பிக்கை இழந்துவிட்டேன்.." இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் கேலன்ட் நீக்கம்.. நெதன்யாகு அதிரடி
நம்பிக்கை இழந்துவிட்டேன்.." இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் கேலன்ட் நீக்கம்.. நெதன்யாகு அதிரடி

டெல் அவிவ்: இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலன்ட்டை பதவி நீக்கம் செய்வது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.

நாட்டின் ராணுவ நடவடிக்கைகளை அவர் சரியாகக் கையாள்கிறார் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டதாகக் கூறி இந்த நடவடிக்கையை நெதன்யாகு எடுத்துள்ளார்.

மத்திய கிழக்கில் இப்போது எப்படிப்பட்ட நிலைமை இருக்கிறது என்பதை நாம் தனியாகச் சொல்லத் தேவையில்லை. இஸ்ரேலை சுற்றிலும் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.

இஸ்ரேல் பதற்றம்: கடந்தாண்டு முதலில் இஸ்ரேல் ஹமாஸுக்கு எதிராகப் போரைத் தொடங்கியது. காசா தாக்குதலை ஹிஸ்புல்லா எதிர்க்க அவர்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்ட நிலையில், இதனால் ஆத்திரமடைந்த ஈரான் நேரடியாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேலும் கடந்த மாதம் இறுதியில் பதிலடி கொடுத்தது.

இருப்பினும், எப்போது வேண்டுமானாலும் இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தும் என்று அஞ்சப்படுகிறது. இப்படி அங்குப் பதற்றமான சூழலே நிலவி வரும் நிலையில், திடீரென இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலன்ட்டை பதவி நீக்கம் செய்து அந்நாட்டுப் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சராக கேலன்ட் இருந்து வந்த நிலையில், இப்போது அவர் நீக்கப்பட்டுள்ளார்.

பதவி நீக்கம்: கேலன்டிற்கு பதிலாக தற்போது வெளியுறவுத் துறை அமைச்சராக உள்ள இஸ்ரல் காட்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிடியோன் சார் என்பவர் இஸ்ரேல் நாட்டின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக நெதன்யாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடந்த சில மாதங்களில் நம்பிக்கை இழந்துவிட்டேன். இதனால் தற்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சரை அப்பதவியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளேன்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு வெளியான உடனேயே கேலன்ட் தனது ட்விட்டரில், "இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதே என் வாழ்வின் முக்கிய பணியாக இருந்தது.. இனிமேலும் அதுவே தான் இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

மோதல்: காசாவில் ஹமாஸுக்கு எதிராகக் கடந்த 13 மாதங்களாக இஸ்ரேல் போரிட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் கடந்த சில மாதங்களாகவே கேலன்ட் மற்றும் நெதன்யாகு இடையே பல கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளது. இதைச் சரி செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் அதற்குப் பெரியளவில் பலன் கிடைக்கவில்லை. இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே இருந்துள்ளது.

இருவருக்கும் இடையே உள்ள இந்த மோதல் எதிரிகளுக்கும் தெரிந்து இருந்ததாகவும் இதனால் போரிலும் கூட இஸ்ரேல் சில பின்னடைவுகளைச் சந்திக்க நேர்ந்ததாகவும் நெதன்யாகு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை முடிவுகளுக்கு முரணான முடிவுகளை கேலன்ட் எடுத்ததாகவும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

முதல்முறை இல்லை: அதேநேரம் கேலன்ட் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவது இது முதல்முறை இல்லை. கடந்தாண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்த சில காலத்திற்கு முன்பு கேலன்ட்டை அமைச்சரவையில் இருந்து நீக்கினார் நெதன்யாகு. இருப்பினும், அதற்கு மிகக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பவே வேறு வழியின்றி மீண்டும் கேலன்ட்டை அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.