சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: தண்டனை விவரங்கள் அறிவிப்பு.!
குற்றம்
கடந்த 2020-ம் ஆண்டு சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
விசாரணையின் போது காவல்துறையினர் நடத்திய மிகக் கடுமையான தாக்குதலால் இருவரும் படுகாயமடைந்து, அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் மனித உரிமை ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இதன் விசாரணை சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. தீவிர விசாரணைக்குப் பிறகு, அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 காவல்துறையினர் இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. விசாரணையின் போது, சம்பவத்தன்று காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் காவலர்கள் ரேவதி, பியூலா மற்றும் சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மிக முக்கிய சாட்சியங்களாகத் திகழ்ந்தனர். இந்த வழக்கில் மொத்தம் 100-க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் விரிவாக விசாரிக்கப்பட்டன. சுமார் 6 ஆண்டுகளாகத் தொய்வின்றி நடைபெற்ற இந்த விசாரணையின் போது, கைது செய்யப்பட்ட காவல்துறையினர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுக்கள் அனைத்தையும் மாவட்ட நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை அனைத்து நிலைகளிலும் தள்ளுபடி செய்தன.
அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி முத்துகுமரன் அவர்கள் வழக்கின் தீர்ப்பை மார்ச் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார். அதன்படி, அன்றைய தினம் நீதிபதி முத்துகுமரன் சாத்தான்குளம் தந்தை - மகன் லாக்கப் மரண வழக்கில் தீர்ப்பை வாசித்தார். அப்போது அவர் தனது தீர்ப்பில், "உயிரிழந்த ஜெயராஜ்க்கு இருதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனை இருந்துள்ளது. ஆனால், கம்பு கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கியதாலே இறப்பு நடந்துள்ளதாக அரசு மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனையில் கூறியுள்ளனர். நாம் அடித்துப் பழகுவதற்கு அப்பா மகன் கிடைத்துள்ளனர்; இவர்களை அடித்து நாம் பயிற்சி எடுத்துக் கொள்வோம் என போலீசார் அவர்களுக்குள் பேசிக் கொண்டுள்ளனர் என சி.பி.ஐ குற்றப் பத்திரிகையில் தெரிவித்துள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில் 9 போலீசாரும் குற்றவாளிகள் என்று நீதிபதி முத்துகுமரன் தீர்ப்பு வழங்கி அதிரடி உத்தரவை பிறப்பித்தார். குற்றவாளிகளுக்கான தண்டனை விபரங்கள் இன்று (மார்ச் 30) அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
