ஆளுநர் தேனீர் விருந்தில் கலந்து கொண்ட அதிமுக முன்னால் அமைச்சரை கண்டவுடன் ஓடி வந்து கை கொடுத்த அண்ணாமலை.!
சென்னை

சென்னை: குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் அதிமுக சார்பில் சென்றிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை பார்த்தவுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஓடி வந்து கைகுலுக்கினார்.
வருடம்தோறும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் சிறப்பு வருந்தினர்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கமான ஒன்று.
அந்த வகையில் குடியரசு தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் தேநீர் விருந்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில் ஆளுநர் மீதான அதிருப்தியின் காரணமாக கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக, மமக உள்ளிட்ட கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணித்தன.
குடியரசு தினத்தையொட்டி, ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. அது போல் முதல் முறையாக தமிழக வெற்றிக் கழகத்திற்கும் தேநீர் விருந்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் அவர் செல்வாரா என்ற கேள்வி எழுந்தது.
ஏற்கெனவே தவெக கட்சி மாநாட்டில் ஆளுநர் பதவி எதற்கு என கேள்வி எழுப்பிய விஜய், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது குறித்து ஆளுநரை சந்தித்து மனு கொடுத்தது ஏன் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டின் முதல் சட்டசபை உரையை வாசிக்காமல் ஆளுநர் சென்றதற்கு விஜய் கண்டனம் தெரிவித்திருந்தார்.
எனவே விஜய்யின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்த நிலையில் அவரும் புறக்கணிப்பதாக அறிவித்தார். அது போல் நாம் தமிழர் கட்சியும் இந்த தேநீர் விருந்தை புறக்கணித்தது. இதையடுத்து நேற்று நடந்த தேநீர் விருந்தில் அதிமுக, தேமுதிக, பாஜக, தமாக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன.
பாஜகவின் முக்கிய தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா, சரத்குமார், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாலகங்கா, தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, தமாகா தலைவர் ஜிகே வாசன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் உட்கார்ந்திருந்த நிலையில் அப்போது அங்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வந்தார். அவர் ஜெயக்குமாரை பார்த்தவாறே வந்தார், ஜெயக்குமாரும் எழுந்து நின்றார், அண்ணாமலை அவருடன் கைகுலுக்கினார். அது போல் ஜெயகுமாரும் எச் ராஜாவும் சிரித்து சிரித்து பேசிய சம்பவமும் அனைவரையும் ரசிக்க வைத்தது.
கடந்த சில மாதங்களாக அதிமுக- பாஜக இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. அதிலும் எச்.ராஜா, அண்ணாமலை, ஜெயக்குமார் உள்ளிட்டோரிடையே கடும் மோதல் போக்கு, வார்த்தை போர்கள் எல்லாம் வந்தன.
இவர்கள் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைப்பார்களா என்ற கேள்விக்கு கூட பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றே ஜெயக்குமார் உள்ளிட்டோர் கூறி வருகிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் மேடை நாகரீகம் கருதி முகத்தை திருப்பிக் கொண்டு போகாமல் இருவரும் ஒருவரை ஒருவர் வரவேற்றுக் கொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.