கடிவாளம் போட்டதா பாஜக? பல்டி அடித்த கஸ்தூரி : விடாமல் துரத்தும் சர்ச்சை!
நடிகை கஸ்தூரி பேச்சில் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றாக மாறி தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னையில் பிராமணர்கள் பாதுகாப்பு கேட்டும், இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் தனி சட்டத்தை கொண்டு வரவேண்டும் என கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி ராஜாக்களுக்கு அந்தப்புர சேவைகள் செய்ய வந்தவர்கள் தெலுங்கு பேசுகிறவர்கள் என்றும், அவர்கள் எப்படி தமிழர்களான பிராமணர்களை, தமிழர்கள் இல்லை என சொல்ல முடியும் என கேள்வி எழுப்பினார்.
இது சமூக வலைதளங்களில் வெளியாகின. இதனால் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் கொந்தளிப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டத்தில் பலர் நடிகை கஸ்தூரி மீது போலீஸ் ஸ்டேஷன் புகார் அளித்தனர்.
பின்னர் தனது பேச்சுக்களை திரித்து சிலர் வெளியிட்டதாக தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தெலுங்கர்கள் குறித்த நடிகை கஸ்தூரியின் பேச்சுக்கு பாஜக கண்டனத்தை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி இதுதொடர்பாக கூறுகையில்:
நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்களை இழிவாக பேசி உள்ளார். தமிழர்களும், தெலுங்கர்களும் சகோதர்கள் போல் உள்ளனா். நடிகை கஸ்தூரியின் பேச்சு மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. சர்ச்சை பேச்சை திரும்ப பெறுவதோடு கஸ்தூரி மன்னிப்பு கேட்க வேண்டும். தெலுங்கு மக்கள் குறித்த நடிகை கஸ்தூரியின் சர்ச்சை பேச்சுக்கு பாஜக கண்டனம் தெரிவிக்கிறது என கூறியுள்ளார்.
இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் நடிகை கஸ்தூரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பேது அவர் கூறியதாவது: தெலுங்கு மக்களை நான் இழிவாக பேசியதாக திமுக பொய் பிரசாரம் செய்து வருகிறது. தனது பேச்சை திரித்து பொய் பிரச்சாரம் செய்கின்றனர். தெலுங்கு மக்களை நான் தவறாக பேசியதாக 100 சதவீதம் பொய் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
தெலுங்கு இனம், தெலுங்கு மக்கள் என்ற சொல்லை நான் கூறவில்லை. தெலுங்கு மக்களை நான் மிகவும் மதிப்பவள். என் பிள்ளைகளும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியையும் படிக்கின்றனர். நான் தமிழச்சி என்றாலும், தெலுங்கு மொழியையும் மதிப்பவள். என்னுடைய நண்பர்கள் என நான் நினைத்த பலரே எனக்கு எதிராக பேசுகின்றனர். மற்ற சமூகங்களையும், பிராமணர்களையும் இழிவுபடுத்தியபோது மக்கள் புரட்சியாக எடுத்து கொண்டனர். வந்தேறி என பிராமண சமுதாயத்தை கூறுபவர்கள் தமிழர்களா என கேள்வி எழுப்பினேன். பொய்களுக்கு அச்சப்படுபவர் நான் இல்லை.
அப்போ மேல இருந்திட்டோம். எங்கள கீழ இழுத்து அசிங்கப்படுத்தாதீங்க. பிராமணர்களை தமிழர்களின் எதிரி என்று சொல்லக்கூடிய சித்தாந்தவாதிகளை என் உயிர் மூச்சு உள்ளவரை எதிர்ப்பேன், என்றார்.
மேலும் அவர் கூறும் போது: தமிழர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்லக்கூடிய திராவிடர்களை தான், நான் அவ்வாறு சொன்னேன். மாற்று மதத்தினரை எப்போதும் குறை சொல்லி பேசக்கூடாது. அப்படி பேசினால் அவர்களுக்கு எவ்வளவு வலிக்கும், அதேபோல அவர்களும் பேசுவது இழிவுபடுத்துவது தவறானது. பொதுவாகவே இங்கு இருப்பவர்கள் பழிவாங்கும் நோக்கத்தில் பேசுகிறார்கள்.
தெலுங்கு மக்களை பேசுவதற்கு எனக்கு உரிமை உள்ளது. நேற்று நான் பேசும் போது தெலுங்கு மக்கள் என்று சொல்லவில்லை. பொதுவாகத் தெலுங்கு பேசுபவர்கள் என்று தான் சொன்னேன். ஒரு பிராமணர் கருவறையில் தவறு செய்கிறார் என்றால், எல்லா பிராமணர்களும் இப்படித்தான் இருப்பார்கள் என்று தமிழ்நாடு முழுவதும் சொல்வது தவறு. அனைத்து செய்தி நிறுவனங்களையும் தூண்டிவிட்டு தவறான தகவல்களை அனுப்பி அவதூறுகளை பரப்புவது திமுகவின் தொழில்நுட்ப குழுவின் வேலை தான்.
வீரபாண்டிய கட்டபொம்மன் நாயக்கன், தெலுங்கர் தான்,தமிழர் இல்லை. ஆனாலும், இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர் அவர்.
இங்கு இருக்கக்கூடிய திராவிட இயக்கங்களும், சனாதன எதிர்ப்பாளர்களும் தான் இன்று அனைவரையும் பிரித்து பார்க்கின்றனர். நாங்கள் அவ்வாறு பார்ப்பதில்லை. என்று தெரிவித்தார்.
மேலும் அவர் பேசியதாவது: வீட்டில் தாங்கள் சாமியை கும்பிட்டு விட்டு, யாகம் செய்துவிட்டு வெளியே வந்து நாத்திகம் பேசுபவர்கள் திமுகவும் திராவிட கழக உறுப்பினர்களும் தான். வீட்டிற்குள் தெலுங்கு பேசிக்கொண்டு, வெளியில் தமிழர்கள் என்றும், திராவிட கழகம் என்றும் பேசிக் கொண்டிருப்பவர்கள் திமுக தான்.
முன் நாள்களில் பிராமண சமுகம் மேலே தான் இருந்தது. ஆனால் அதை தற்போது கீழே இழுத்து தள்ளிவிட்டு மேலே வரவிடாமல் தடுக்கிறீர்கள். கடந்த வாரம் தமிழ்தாய் வாழ்த்தில் திராவிடம் என்ற வார்த்தை இடம் பெறாததை குறித்து அவதூறு பரப்பினார்கள். எங்கள் அமைச்சரவையில் பார்ப்பானுக்கு இடமில்லை என்று சொல்கிறீர்கள். தமிழ்நாட்டில் பிராமணர்களை ஏன் தள்ளி வைக்கிறீர்கள். தமிழ்நாட்டு அரசியல் சம்பந்தப்பட்ட விஷயத்தை ஏன் தெலுங்கு மக்களிடம் பரப்புகிறீர்கள்.
பாசிசம் என்றால் என்ன தெரியுமா.
எச்.ராஜா கொடுத்த விளக்கம் இதுதான்… பிராமணர்களுக்கு நடக்கக்கூடிய அநியாயங்களை தான் பாசிசம் என்றார். இதைத்தான் நான் தட்டி கேட்கிறேன். பிராமணர்களுக்கு எதிராக திராவிடர்கள் கூறும் பொய்யை யாரும் நம்ப வேண்டாம். எத்தனையோ திராவிட பொய்களில் இதுவும் ஒன்று.
தெலுங்கு மக்களின் அன்புக்கு பாத்திரமாகி இருக்கிறேன். நான் தெலுங்கு வீட்டின் மருமகள், நான் ஏன் அவ்வாறு பேச போகிறேன். ராஜ தர்பாரில் ஆடல் அரசிகளுக்கு இசை மற்றும் சங்கீத வாத்தியங்கள் வாசிப்பவர்கள் எந்த சாதியை சேர்ந்தவர்கள் என்று கலைஞர் அன்று கேட்டார். திமுக கூட்டணியில் இருக்க கூடிய வைகோ தெலுங்கர்களை தவறாக பேசினார். இவ்வளவு நாள் லட்டு பிரச்சினை வந்தபோது அனைவரும் தெலுங்கு மக்களை விமர்சித்தீர்கள். இப்போது திடீரென்று தெலுங்கு மக்கள் மீது எப்படி உங்களுக்கு கரிசனம் வந்தது.
ஐயர், ஐயங்கார் என்ற உட்பிரிவுகளை வேறு எங்குமே நாம் பார்க்க முடியாது. பிராமணர்கள் மற்றவர்களை ஒடுக்கினார்கள் என்று சொல்வது பொய். நான் பேசியது எந்த ஒரு தனிப்பட்ட நபரையோ குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இப்போது நான் பேசுவதற்கு கூட திமுக என்ற வார்த்தையை வைத்து என் மீது வழக்குப்பதிவு கூட செய்ய முடியாது. பிராமணர்களை தமிழர்களின் எதிரி என்று சொல்லக்கூடிய சித்தாந்தவாதிகளை என் உயிர் மூச்சு உள்ளவரை எதிர்ப்பேன்.
திராவிடம் என்பது நில அமைப்பு மற்றும் மரபு. திராவிடியம் என்பது பிராமண வெறுப்பு, கடவுள் மறுப்பு, சனாதன ஒழிப்பு ஆகும்,என்று நடிகை கஸ்தூரி கூறினார். பின்பு நிருபர்களிடம் சண்டையிட்டார். அப்போது தெலுங்கு பேசுபவர்கள் தமிழர்களா என்று கேட்டார். காமாட்சி நாயுடு, சுதாகர் ரெட்டி ஆகியோர் பிராமணர்களை எதிர்க்கவில்லை. அதனால் அவர்களை நான் குறை கூறவில்லை.
அதே சமயத்தில் பிராமணர்களை எதிர்ப்பவர்களை தான் நான் கூறினேன் என்றார். இதனால் நிருபர்களுக்கும் கஸ்தூரிக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. அந்தப்புரத்துக்கு சேவை செய்ய வந்தவர்கள் என்ற வார்த்தை எவ்வளவு கொடியது என நிருபர்கள் கேட்க, மழுப்பாலான்னு பதில் அளித்தார்.
பின்பு தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது: பிராமணர்கள் லஞ்சம் வாங்கி, ஏமாற்றி கொள்ளை அடித்து சொத்து சேர்க்க மாட்டார்கள் எனக் கூறும் போது நெறியாளருக்கும் இவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. சொல்லாத கருத்தை சொல்ல வேண்டாம் என நெறியாளர் கேட்டபோது. நான் பேசிய தீர்வேன் என அடம் பிடித்து நிகழ்ச்சி மைக்கை கீழே போட்டுவிட்டு வெளியேறினார். இந்த சம்பவங்களால் கஸ்தூரி மீது தமிழகமே கொதிப்பில் ஆழ்ந்துள்ளது. பல அமைப்புகள் கொதித்து எழுந்துள்ளன.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: திராவிடம் என்று சொல்லே. தமிழகம், ஆந்திரம், கேரளம், கன்னடம் என அனைவரும் ஒன்றாக இருந்த பூமி. மொழி வாரி மாநிலங்கள் பிரித்த பின்பு தான் தனித்தனியாக பிரிந்தன. திராவிடம் பூலோகத்தின் எல்லை. திராவிடம் பேராணந்தம்.
மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பதற்கு முன்பு ஒரே கலாச்சாரம் ஒரே கொள்கை ஒரே சிந்தனையுடன் மக்கள் வாழ்ந்து வந்தனர். தலைநகரம் சென்னையில் தெலுங்கு பேசும் மக்கள் 75 சதவீதம் உள்ளனர். திருப்பதி, காளகஸ்தியில் தமிழ் பேச மக்கள் 75 சதவீதம் உள்ளனர். இடுக்கி மற்றும் மூணாறு பகுதியில் தமிழ் பேசும் மக்கள் 75 சதவீதம் உள்ளனர். ஒருவரை ஒருவர் சார்ந்ததுதான் திராவிடம்.
வார்த்தையில் இணைந்து வாழ்கின்றவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வார்த்தைகளை கஸ்தூரி உதிர்க்கக்கூடாது. தெலுங்கு லேது.. தேசம் லேது என்று முன்னாள் ஒரு அறிஞர் உதித்த வார்த்தைகள் நம் கண் முன்னே நிற்கிறது. பிராமணர்களை மற்றவர்கள் தாக்குகிறார்கள் என்பதற்காக, கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்று லாவனி பாடுவது நன்றாகவாக இருக்கிறது. முன்பு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவற்றில் இரண்டு சதவீதம் மட்டும் உள்ள பிராமண சமுதாயத்தினரை கோலோச்சியினர். இதற்கு எதிராக போரிட்டு அனைவருக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டுமென போராடியவர் தந்தை பெரியார் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. தற்போது அனைத்து சமுதாயத்தினரும் அனைத்து பதவிகளிலும் வந்துள்ளனர்.
தமிழுக்கும் தமிழருக்கும் தெலுங்கின மக்கள் செய்த தொண்டுகள் ஏராளம் ஏராளம். நீயே முக்கண் முதல்வனாகவும் ஆகுக. உனது நெற்றியில் நெற்றிக்கண் காட்டிய போதும் குற்றம் குற்றமே என்று நக்கீராக வந்து கடவுளிடமே வாதாடிய ஏ.பி நாகராஜன் தெலுங்கர் தான். சொல்லின் செல்வர் சம்பத், சுதந்திரப் போராட்ட வீரர் பாண்டிய கட்டபொம்மன், வீரமங்கை வேலு நாச்சியாருக்கு பீரங்கி படையெடுத்தும், துப்பாக்கிகள் கொடுத்தும் உதவிய கோபால் நாயக்கர் உட்பட பல நாவல் ஆசிரியர்கள் மகாவித்துவான்கள் தெலுங்கர்களாகவே உள்ளனர். அவர்களைப் பிரித்து பார்ப்பது உடலில் இருந்து உயிரை பிரிப்பது போல் ஆகும்.
வீட்டிலே தெலுங்கு பேசினாலும் நாட்டிலே தமிழராக வாழ்வர் பலர் உள்ளனர். இது போன்ற பிரிவினைவாத தீயை அவ்வப்போது வைப்பது அநாகரிகமான செயலாகும்.
இது பிராமணர்கள் மீதுள்ள மதிப்பை மேலும் கீழே இறக்கும். ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று சொன்ன மகாகவி பாரதி பிராமணர் என்பதை நாம் மறக்க முடியுமா. தமிழ் தாத்தா உ.வே.சா.இல்லாவிட்டால் நமக்கு ஏடு ஏது. இலக்கியம் ஏது.
எத்தனை பட்டை வைரத்தில் எனினும் வைரம் ஒரு பொருளே… எத்தனை நதிகள் இன்னாட்டில் எனினும் சங்கமம் ஒரு கடலே… எத்தனை ஜாதிகள் இந்நாட்டில் எனினும் நாங்கள் இந்தியரே என்று சூறைத்தார் பாரதி. இதை கஸ்தூரி மறந்து விட்டார் போல தெரிகிறது. தன்னைப் பற்றி கிசுகிசுப்புகள் அதிகம் வருவதாக கஸ்தூரி பொறிந்து தள்ளுகிறார். ஆடத் தெரியாதவனுக்கு தெரு கோணல் என்பதைப் போல, நான் பேசியது அதுவல்ல என மறுக்கிறார்.
சுடுகாட்டு எலும்புகளை சோதித்துப் பார்த்ததிலே வடநாட்டு எலும்பு என்று வந்த எலும்பு இல்லையடா… தென்னாட்டு எலும்பு என்று தெரிந்து வைக்கவில்லையடா. ஒரு நாட்டுக்குள் ஓராயிரம் பிரிவு என்றால் என்னாலும் தொல்லையடா என்று கவிப்பேரரசு கண்ணதாசன் எழுதிய வரிகள் இப்போது நமக்கு ஒற்றுமை விளக்குகிறது. குளத்தில் இறங்கி எல்லோரும் வாத்து பிடிக்கும் போது, கஸ்தூரி மட்டும் நத்தை பிடிப்பது விளம்பரத்திற்காகவா, இல்லை கருத்து கலவரத்திற்காவா என்பது விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.