மகாராஷ்டிராவில் யாருக்கு முதலமைச்சர் பதவி. ! குழப்பத்தில் ஷிண்டே
மகாரஷ்டிரா தேர்தல் முடிவில் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளில் யாரின் கை ஓங்கியுள்ளது மற்றும் யாருக்கு முதலமைசச்ர் வாய்ப்பு அதிகம் என்பது குறித்து பார்ப்போம்.
அபார வெற்றியில் பாஜக கூட்டணி:
மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவில் இன்று வெளியாகியுள்ள நிலையில், பாஜக கூட்டணியானது மிகப் பெரிய வெற்றியை எட்டியுள்ளது. மொத்தம் உள்ள 288 தொகுதியில், தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 230 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது; காங்கிரஸ் கூட்டணி 53 தொகுதிகளில் முன்னிலையும், இதர கட்சிகள் 3 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றன. இந்நிலையில், மீண்டும் பாஜக கூட்டணியானது, ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றே சொல்லலாம்.
மகாயுதி கூட்டணி:
மகாயுதி கூட்டணியில் பாஜக, ஷிண்டே தரப்பு சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் அங்கம் வகித்துள்ளன.
பாஜக, 149 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் 130 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது , ஏக்நாத் சிவசேனா 81 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் 55 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறார் , அஜித் பவார் தலைமையிலான என்சிபி 59 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், 40 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
யார் முதலமைச்சர்
இந்நிலையில், பாஜக கூட்டணியில் யார் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்விதான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சராக இருந்த தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவாரா அல்லது தற்போதைய முதலமைச்சராக இருக்கும் சிவசேனா கட்சியின் ஏக்நாத் ஷிண்டேவே தொடர்வாரா என்று இருவருக்கும் இடையில்தான் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓங்கும் பாஜகவின் கை:
தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, பாஜக கட்சியானது, கூட்டணியில் உள்ள சிவசேனா தயவின்றி ஆட்சியை அமைக்க முடியும் என்பதால், பாஜக கட்சியில் இருந்துதான் முதலமைச்சர் இருப்பதற்கான அதிகம் வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்ததாவது, ' எங்கள் கூட்டணியானது, இதுகுறித்து கலந்து ஆலோசித்து முடிவு எடுப்போம்' என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பாஜக செய்தி தொடர்பாளர் பிரவின் தரேகர் தெரிவிக்கையில். "இந்த முடிவானது, எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நாங்கள் வெற்றி பெறுவோம் என்று எங்களுக்குத் தெரியும், ஆனால் இவ்வளவு பெரிய முடிவை எதிர்பார்க்கவில்லை. தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராக வருவார் என்று நான் நினைக்கிறேன்," என்று பாஜக செய்தித் தொடர்பாளர் பிரவின் தரேகர் தெரிவித்தார்.
மகாயுதி கூட்டம்:
இந்த தருணத்தில், பாஜக மற்றும் சிவசேனா ஆதரவாளர்கள் தங்கள் தலைவர்களை மகாராஷ்டிராவில் முதலமைச்சராக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நாளை பாஜக கூட்டணி கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் , முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்படுவாரா அல்லது ஷிண்டேவே தொடர்வாரா என தெரிந்துவிடும். சில சமயங்களில், மிகவும் பரீட்சையம் இல்லாத நபரை பாஜக முன்னிறுத்தும்; இதுபோன்ற திட்டத்தை கையாளுமா என்பது நாளை தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.