ஓசூர் அருகே 'தட்சிண திருப்பதி' கோபசந்திரம் கோயிலில் 60 அடி உயர பிரம்மாண்ட புதிய தேர் வெள்ளோட்டம்.!
கிருஷ்ணகிரி
ஓசூர் அருகே 'தட்சிண திருப்பதி' கோபசந்திரம் கோயிலில் 60 அடி உயர பிரம்மாண்ட புதிய தேர் வெள்ளோட்டம். நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தட்சிண திருப்பதி எனப்படும் கோபசந்திரம் ஸ்ரீ வெங்கட ரமண சுவாமி திருக்கோயிலில், சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டி முடிக்கப்பட்ட பிரம்மாண்ட புதிய தேரின் வெள்ளோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் இந்தத் திருக்கோயிலுக்குப் புதிய 'மகா ரதம்' அமைக்கப்பட வேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது. கடந்த 2012-ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களால் சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கடந்த 13 ஆண்டுகளாக நடைபெற்ற இந்தத் தேர் கட்டுமானப் பணியில் சுமார் 9,265 கைவினைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டு, நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளைச் செய்துள்ளனர். இந்த புதிய மகா ரதம் நவீன தொழில்நுட்பம் மற்றும் பழங்காலச் சிற்பக் கலை நயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 60 அடி உயரம் 100 டன் எடையில் உருவான இந்த மகா ரதத்தில் நுணுக்கமான கலை நயத்துடன் கூடிய மர சிற்பங்கள் அமைந்துள்ளது அனைவரையும் வெகுவாக கவரும் படியாக உள்ளன. இன்று காலை திருக்கோயிலில் சுவாமிக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கிருஷ்ணன் மற்றும் துணை ஆணையர் ராமுவேல் ஆகியோர் முன்னிலையில் தேரோட்டம் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், அறங்காவலர் குழு தலைவர் நாராயணசுவாமி, ஜே ஆர் குடும்பத்தைச் சேர்ந்த சரத் பரத் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு, 'கோவிந்தா கோவிந்தா' என பக்தி கோஷங்கள் முழங்க தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.
கோபசந்திரம் மாட வீதிகள் வழியாக அசைந்தாடி வந்த பிரம்மாண்ட தேரைக் காண நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
வெள்ளோட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், வரும் மார்ச் 31-ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற கோபசந்திரம் திருத்தேர் திருவிழா மிக விமர்சையாக நடைபெறவுள்ளது.
இதற்கான விரிவான ஏற்பாடுகளை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி சேவா டிரஸ்ட் அறக்கட்டளையினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
