திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு .!
தனியரசு
சென்னை : முன்னாள் எம்எல்ஏ தனியரசுவின் கொங்கு இளைஞர் பேரவை திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட திமுக கூட்டணியில் தனியரசு தொகுதி கோரியிருந்த நிலையில் இன்னும் வழங்கப்படாததால் அவர் அதிருப்தியடைந்துள்ளார்.
நடைபெற உள்ள சட்டசபை தேர்லையொட்டி தமிழகத்தில் திமுக கூட்டணியில் பல புதிய கட்சிகள் இணைந்தன. தேமுதிக, எஸ்டிபிஐ உள்பட பல கட்சிகளை நாம் கூறலாம்.
ஏற்கனவே இருக்கும் காங்கிரஸ், விசிக, 2 கம்யூனிஸ்ட், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் கட்சி உள்பட மொத்தம் 21 கட்சிகளும் பிரமாண்டமான கூட்டணியாக திமுக வலம் வருகிறது.
தனியரசுக்கு ஒதுக்கப்படவில்லை
இந்த கூட்டணியில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையும் இருந்தது. இதன் தலைவராக தனியரசு உள்ளார். இவர் முன்னாள் எம்எல்ஏ ஆவார். இந்நிலையில் தான் திமுக கூட்டணியில் தனியரசு ஒரு தொகுதி கேட்டுள்ளார். இதுதொடர்பாக திமுக தொகுதி பங்கீட்டு குழுவினருடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். நேற்றைய தினம் தனியரசு இந்த பேச்சுவார்த்தையை நடத்தினார். ஆனால் தற்போது வரை தனியரசுக்கு தொகுதி எதுவும் ஒதுக்கப்படவில்லை.
விலக முடிவு
இதனால் தனியரசு அதிருப்தியாகி உள்ளார். இந்நிலையில் தான், அவர் திமுக கூட்டணியில் இருந்து விலக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனையை தொடர்ந்து அவர் தனது முடிவை அறிவிக்க உள்ளார். திமுக சார்பில் தொகுதி ஒதுக்கப்படாவிட்டால் அவர் கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
2 முறை எம்எல்ஏ
தனியரசு இதற்கு முன்பு அதிமுக கூட்டணியில் இருந்தார். கடந்த 2011ம் ஆண்டில் அதிமுக கூட்டணியில் தனியரசு நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தொகுதியில் போட்டியிட்டு 31,018 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன்பிறகு 2016 சட்டசபை தேர்தலில் தனியரசு காங்கேயம் தொகுதியில் 13,135 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மீண்டும் அவர் கொங்கு பெல்ட்டில் களமிறங்க தயாராகி வரும் நிலையில் தான் திமுக சீட் ஒதுக்குவது பற்றி இன்னும் எதுவும் தெரிவிக்கவில்லை.
திமுகவுக்கு பின்னடைவு
திமுக கூட்டணியில் மொத்தம் 21 கட்சிகள் இருந்தன. இதில் ஏற்கனவே வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி கூட்டணியில் இருந்து விலகியது. வேல்முருகன் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர். வடமாவட்டங்களில் பல தொகுதிகளில் செல்வாக்கு மிக்க தலைவராக உள்ளார். அவரது விலகல் ஏற்கனவே கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி உள்பட வடமாவட்டங்களில் இருக்கும் சில தொகுதிகளில் திமுகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இப்படியான சூழலில் தனியரசு விலகினால் அது திமுகவுக்கு இன்னும் இழப்பே என்பது அரசியல் வல்லுநர்களின் கருத்தாகும்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )
விளம்பரம் & செய்தி தொடர்புக்கு
944 2 999 074
