பொது வழிப்பாதையை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் கிராம மக்கள் அவதி என மாவட்ட ஆட்சியரிடம் மனு. !

கிருஷ்ணகிரி

பொது வழிப்பாதையை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் கிராம மக்கள் அவதி என மாவட்ட ஆட்சியரிடம் மனு. !

கிருஷ்ணகிரி அருகே பொது வழிப்பாதையை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் கிராம மக்கள் அவதி, சாலை வசதி இல்லாதால் வெளியூர்களில் இருந்து யாரும் பெண் எடுக்க வருவது இல்லை என கூறி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவினைக் கொடுத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சின்ன ராகிமனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி என்பவர் எங்களது கிராமத்திற்கு செல்லும் பொது வழிப்பாதையை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் ஊருக்கு ஆம்புலன்ஸ் வாகனம் உள்ளிட்ட எந்த வாகனமும் ஊருக்கு வருவது இல்லை. இறந்து போனவர்களை எடுத்து செல்லக்கூட சரியான பாதை இல்லாததால் கிராம மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதோடு எங்கள் கிராமத்தில் பெண் கேட்டு யாரும் வருவது இல்லை என கூறி  மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனுவினைக் கொடுத்தார்.

அந்த மனுவில் சின்ன ராகிமானப்பள்ளி கிராமத்தில் சுமார் 42 குடும்பத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகிறோம். சின்ன ராகிமானப்பள்ளி கிராமத்திற்கு செல்ல சிக்காரி மேடு முதல் சின்ன ராகிமானப்பள்ளி வரை 20 அடி சாலை அரசு ஆவணங்களின்படி உள்ளது, ஆனால் அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் வழிப்பாதையை  ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர்.

இதனால் கிராமத்தில் அவசர உதவிக்கு 108 அழைத்தால் கூட சாலையில் வாகனம் செல்ல முடியாத நிலையில், அவசர உதவி கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. கிராமத்தில் இருந்து 30 க்கும் மேற்பட்ட மாணவ மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்று வருகின்றனர். மழைக்காலங்களில் இருசக்கர வாகனங்கள் கூட இயக்க முடியாத அளவிற்கு சேரும், சகதியாக இருப்பதால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் விடுமுறை எடுக்கும் நிலை ஏற்படுகிறது.

30 வருடங்களாக பொது வழி ஆக்கிரமிப்பு அகற்ற மனு கொடுத்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை, இனிமேலாவது மாவட்ட ஆட்சியர் அவர்கள் அரசு வருவாய் துறையில் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் அளந்து ஆக்கிரமிப்பு அகற்றி தார் சாலை அமைத்து தர வேண்டும். முறையாக சாலை வசதி இல்லாததால் யாரும் பெண் கேட்டு வருவது இல்லை என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

செய்தியாளர்

மாருதி மனோ