ஓபிஎஸ்ஸுக்கு பதில்! போடியில் நாராயணசாமி! லால்குடியில் லீமா! கோபியில் பிரபு! களநிலவரம் என்ன?

அதிமுக

ஓபிஎஸ்ஸுக்கு பதில்! போடியில் நாராயணசாமி! லால்குடியில் லீமா! கோபியில் பிரபு! களநிலவரம் என்ன?

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு தற்போது திமுகவில் இணைந்துள்ள நிலையில் அவரது தொகுதியான போடிநாயக்கனூர், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாராயணசாமிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அது போல் செங்கோட்டையனும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு தவெகவில் இணைந்துள்ள நிலையில் அவரது தொகுதியும் மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக 167 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 23 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கடந்த 25 ஆம் தேதி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்தார்.

அது போல் இரண்டாம் கட்டமாக 127 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார். மேலும் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஓரிரு நாட்களில் வெளியிடுவார் என தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில் அதிமுக வேட்பாளர்களாக போடிக்கு நாராயணசாமியும் கோபிக்கு பிரபுவும் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். அந்த தொகுதிகளின் கள நிலவரத்தை காணலாம்.

கோபிசெட்டிபாளையம்

இது ஒரு நட்சத்திர தொகுதியாக கருதப்படுகிறது. மேலும் அதிமுகவின் கோட்டையாகவும் உள்ளது. இங்கு கே.ஏ.செங்கோட்டையன் 9 முறை வென்றுள்ளார். இவர் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளதால் அவருக்கு பதில் பிரபு என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் புதுமுகம் என தெரிகிறது. செங்கோட்டையன் தவெக சார்பில் வேட்பாளராக களமிறக்கப்பட்டால் (கட்சியை விட்டுவிட்டு வேட்பாளரை மக்கள் பார்த்தால்) பிரபுவுக்கு வெற்றி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

போடிநாயக்கனூர்

தமிழகமே உற்று நோக்கும் ஒரு தொகுதியாக போடி உள்ளது. இங்கு 2011 ஆம் ஆண்டு முதல் ஓபிஎஸ் அத்தொகுதியின் அடையாளமாகவே காணப்பட்டார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் 1989-ல் முதன்முதலில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது இத்தொகுதியில்தான். தற்போது ஓபிஎஸ் திமுகவில் இணைந்துள்ளதால் அவர் இந்த தொகுதியில் களமிறக்கப்படுவார் என்றும் அவருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் என்றும் சொல்லப்படுகிறது.

லால்குடி

லாட்டரி மார்ட்டின் மனைவி லீமா ரோஸுக்கு அதிமுகவில் இணைந்த ஒரே மாதத்தில் லால்குடி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக எம்எல்ஏவாக உள்ள ஏ.சவுந்திரபாண்டியன் கடந்த 2006, 2011, 2016, 2021 ஆகிய 4 முறையும் போட்டியிட்டு தொடர்ந்து 20 ஆண்டுகளாக எம்எல்ஏவாக உள்ளார். இதனால் திமுக சார்பில் மீண்டும் அவரே போட்டியிட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி போட்டியிட்டால் லீமா ரோஸின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகத்தான் இருக்கும்.

அது போல் அதிமுகவில் சிட்டிங் எம்எல்ஏக்கள் 13 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. சென்னையில் 13 தொகுதிகளுக்கான வேட்பாளர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அது போல் வைகைச்செல்வன், சரோஜா, முன்னாள் சபாநாயகர் தனபால், மாஃபா பாண்டியராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.