எம்எல்எஸ் கோப்பை கால்பந்து; மெஸ்சி தலைமையிலான அணிக்கு பட்டம்
புளோரிடா: அமெரிக்காவில் நடைபெற்ற எம்.எல்.எஸ் கோப்பை கால்பந்து போட்டியில், லியோனல் மெஸ்சி தலைமையிலான இன்டர் மியாமி அணி முதன்முறையாக கோப்பையை வென்றது.
அமெரிக்காவில் நடைபெறும் எம்.எல்.எஸ் (Major League soccer) கால்பந்து போட்டித் தொடர் சிறந்த தொழில்முறை கால்பந்து லீக் தொடராகும். அதன்படி, 29 அணிகள் கலந்துகொண்ட 28-ஆவது சீசன் தற்போது நடந்து முடிந்துள்ளது.
இதில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த இன்டர் மியாமி அணி, அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சியின் வருகைக்குப் பின்னர் விஸ்வரூபம் எடுத்து கோப்பையை வசப்படுத்தி உள்ளது.
எம்.எல்.எஸ் கால்பந்து தொடர் தொடங்கி பாதியை கடந்த பிறகே இன்டர் மியாமி அணியில் மெஸ்சி இணைந்தார். அதன் பின்னர் மியாமி அணிக்கு ஏறுமுகம் தான். விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் இன்டர் மியாமி அணியும் நாஷ்வில்லே எஸ்சி அணியும் மோதின.
ஆட்டத்தின் 23ஆவது நிமிடத்தில் மெஸ்சி தனது வழக்கமான இடதுகால் கோலால் முத்திரை பதித்து மியாமி அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். நாஷ்வில்லே எஸ்சி அணிக்கு கோலடிக்க கிடைத்த வாய்ப்புகளை அவ்வணி வீரர்கள் வீணடித்தனர். சில வாய்ப்புகளை மியாமி அணியின் கோல்கீப்பர் (Callender) கேலண்டர் அற்புதமான முறையில் முறியடித்தார். யாரும் எதிர்பார்த்திராத வகையில், கூடுதல் நேரத்தில் நாஷ்வில்லே அணி வீரர் ஃபஃபா தலையால் முட்டி அடித்த கோலால் ஆட்டம் டிராவானது.
இதனால் போட்டியின் முடிவை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் இரு அணியினரும் ஒருவர் பின் ஒருவர் கோலடித்தனர். இரு அணி கோல்கீப்பர்களும் தலா ஒரு கோலை தடுத்தனர். இறுதியில் கோல்கள் எண்ணிக்கை சமமாக இருந்ததால், இரு அணிகளின் கோல் கீப்பர்களும் கோலடிக்கும் முறை கொண்டுவரப்பட்டது. இதில் இன்டர் மியாமி அணியின் கோல்கீப்பர் கேலண்டர் கோலடிக்க, நாஷ்வில்லே கோல்கீப்பரின் முயற்சியை கேலண்டர் சாதுர்யமாக தடுத்தார். இதன் வாயிலாக இன்டர் மியாமி அணி வெற்றி பெற்று முதன்முறையாக எம்.எல்.எஸ் கால்பந்து தொடரில் கோப்பையை தனதாக்கியது. இந்த வெற்றியை மெஸ்சி உள்ளிட்ட இன்டர் மியாமி அணி வீரர்களும், நிர்வாகிகளும் கொண்டாடி மகிழ்ந்தனர்.