எஸ்.வி.சேகர் வழக்குகளில் கையை விரித்த உச்ச நீதிமன்றம்; தேவையற்ற வேலை என ‘குட்டு’

எஸ்.வி.சேகர் வழக்குகளில் கையை விரித்த உச்ச நீதிமன்றம்; தேவையற்ற வேலை என ‘குட்டு’

டெல்லி: நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிரான அவதூறு செய்தியை தனது பேஸ்புக் பக்கத்தில் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பகிர்ந்திருந்தார். இதுதொடர்பாக அவர் மீது பத்திரிகையாளர்கள் அளித்த புகாரின் பேரில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார். நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்தார். ஆனால், வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் தாக்கல் செய்திருந்த மனு, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.கே.மிஷ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (ஆகஸ்ட் 18) விசாரணைக்கு வந்தது.

அப்போது எஸ்.வி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், எஸ்.வி.சேகர் கண்ணுக்கு மருந்து போட்டுக் கொண்டிருந்தபோது தவறுதலாக அவரது கை விரல்கள் send பட்டனை அழுத்திவிட்டன, அதனால் அந்தச் செய்தி ஃபார்வர்டு ஆகிவிட்டது“ எனக் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கண்ணுக்கு மருந்து போட்டுக் கொண்டிருப்பவர் ஏன் சமூக ஊடகங்களில் செய்தியை ஃபார்வர்டு செய்ய வேண்டும்?“ என வினவினர்.

அதற்கு பதிலளித்த எஸ்.வி.சேகர் தரப்பு வழக்கறிஞர், சமூக வலைதளங்கள் வாழ்வின் ஓர் அங்கமாகிவிட்டன, அதை தவிர்ப்பது கடினம் என்று தெரிவித்தார்.

அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், “சமூக வலைதளங்கள் மிகவும் அவசியம் என நாங்கள் கருதவில்லை, சமூக ஊடகங்களிலிருந்து நாங்கள் விலகியிருக்கிறோம், எஸ்.வி.சேகருக்கு என்ன வயது?“ எனக் கேள்வி எழுப்பினார்கள். அவருக்கு 72 வயதாகிறது என்று வழக்குரைஞர் தெரிவித்தார்.

 அப்போது, “இந்த வயதில் அவர் (எஸ்.வி.சேகர்) இதையெல்லாம் ஏன் செய்கிறார்? அவர் ஏன் சமூக ஊடக செய்தியை ஃபார்வர்டு செய்ய வேண்டும்?, சமூக ஊடகத்தைப் பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்“ என நீதிபதிகள் குறிப்பிட்டனர் மேலும், “சென்னை உயர் நீதிமன்றத்தின் முடிவில் தலையிட முடியாது - எஸ்.வி.சேகருக்கு எதிரான கிரிமினல் வழக்குகளை ரத்து செய்ய முடியாது” என்று நீதிபதிகள் கூறினர்.