நீட் தேர்வுக்கான குரல் மக்கள் போராட்டமாக மாற வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்
சென்னை: மருத்துவ பட்டப்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக தமிழநாட்டில் தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது. நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் அதிக மதிப்பெண்கள் பெற்றும் மருத்துவராக முடியாத அரியலூர் அனிதா உள்ளிட்ட பல மாணாக்கர் தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொண்டனர். அண்மையில் ஜெகதீஸ்வரன் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டதும் தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
நீட் தேர்வு தமிழ்நாட்டின் உணர்வுப்பூர்வமான விசயங்களில் ஒன்றாக இருந்துவரும் சூழலில், சமீபத்தில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நீட் விலக்கு மசோதாவுக்கு ஒரு போதும் ஒருபோதும் ஒப்புதல் அளிக்க மாட்டேன் (Never ..Ever..) என்று கூறியிருந்தார். இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசை எதிர்த்தும், நீட் தேர்வு மசோதாவுக்கு ஒப்புதல் தராத ஆளுநரைக் கண்டித்தும் திமுக இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் நாளை மறுதினம் (ஆக.20) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் உதயநிதி பங்கேற்க உள்ளார். இது தொடர்பாக சென்னையில் இன்று (ஆக.18) செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்பதுதான் தங்களது நோக்கம் என்று கூறினார்.
நீட் தேர்வு விலக்குக்கான முழு பொறுப்பையும் தான் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்த உதயநிதி, தேர்தல் பரப்புரையின்போது நீட் ரத்து செய்யப்படும் என்று தான் உறுதியளித்தது உண்மைதான் என்றும் கூறினார். அதற்கான முழுப் பொ றுப்பையும் தான் ஏற்பதாக குறிப்பிட்ட உதயநிதி, இந்த விவகாரம் குறித்துப் பேசிப் பயனில்லை, மக்கள் போராட்டமாக இது மாற வேண்டும் என்று வலியுறுத்தினார்.