அமித் ஷா வழங்கிய அறிவுரை; முடிவை நிறுத்தி வைத்த ஆர்.என்.ரவி
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழங்கிய அறிவுரையை அடுத்து தமிழ்நாடு அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கும் முடிவை நிறுத்தி வைத்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்ததை அடுத்து, அவர் கவனித்து வந்த துறைகள் வேறு 2 அமைச்சர்களுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டன.
இதுபோன்ற சூழலில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்றிரவு (29, ஜூன்) உத்தரவு பிறப்பித்தார்.
ஆளுநரின் நடவடிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் எம்பி மணிஷ் திவாரி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், மதுரை எம்பி சு.வெங்கடேசன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
ஒரு அமைச்சரை அமைச்சரவையிலிருந்து நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லையென்றும், இப்பிரச்னையை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
இதனிடையே, அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திலேயே ஆளுநர் இந்த உத்தரவை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் எழுதிய கடிதமும் வெளியானது.
அதில், “செந்தில் பாலாஜி பதவி நீக்கம் தொடர்பாக தலைமை வழக்கறிஞரிடம் கருத்தை கேட்பது சரியானதாக இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எனக்கு அறிவுறுத்தி உள்ளார். ஆகவே, தலைமை வழக்கறிஞரை அணுகி கருத்துக் கேட்க உள்ளேன். ஆகையால், அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவு என்னிடமிருந்து மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது“ என ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டுள்ளார்.