மதுரையில் சுற்றுலா ரயிலில் தீ; 10 பேர் பலி; சிலிண்டரை பற்ற வைத்தபோது பரிதாபம்
மதுரை: மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து தென்னிந்தியாவில் சுவாமி தரிசனம் செய்வதற்காக 60-க்கும் மேற்பட்டோர் கடந்த 17ஆம் தேதி யாத்திரைப் பயணிகள் ரயில் மூலமாக தமிழ்நாட்டிற்கு வந்தனர். இவர்கள் நேற்று (ஆகஸ்ட் 25) நாகர்கோவில் பத்மநாபசுவாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு இன்று (ஆகஸ்ட் 26) அதிகாலை மதுரை வந்து சேர்ந்தனர்.
இவர்கள் பயணித்த ரயில் பெட்டி மதுரை ரயில் நிலையத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மதுரை – போடி லயனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அப்போது அந்தப் பெட்டியிலிருந்த சில பயணிகள் காபி தயாரிப்பதற்காக சிலிண்டர் அடுப்பை பற்ற வைத்துள்ளனர். அச்சமயம் சிலிண்டர் வெடித்துச் சிதறி தீப்பற்றிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ரயிலில் இருந்தவர்கள் உயிருக்கு அஞ்சி கூக்குரல் எழுப்பியுள்ளனர். ரயில் பெட்டியிலிருந்து 50-க்கும் மேற்பட்டோர் கீழே குதித்து தப்பினர். இருப்பினும், இந்த கொடூர நிகழ்வில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட 20-க்கும் அதிகமானோர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அதே மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
ரயில் தீ விபத்தை அடுத்து, ரயில்வே காவல்துறையினர், உள்ளூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த அமைச்சர் மூர்த்தி, மதுரை ஆட்சியர் எம்.எஸ்.சங்கீதா மற்றும் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர்.
விபத்து குறித்து தெற்கு ரயில்வே முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி பி.குகணேசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தனியார் ரயில் பெட்டியிலிருந்த பயணிகள் சட்டவிரோதமாக சமையல் எரிவாயு சிலிண்டரை பற்ற வைத்ததால் தீ விபத்து நேரிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனலூர் – மதுரை எக்ஸ்பிரஸ் மூலம் நாகர்கோவில் சந்திப்பில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 25) இணைக்கப்பட்ட பெட்டி மதுரை வந்தவுடன் பிரிக்கப்பட்டதாக குகணேசன் தெரிவித்துள்ளார்.