‘விடாது கருப்பு‘ - திமுக அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகள் இன்று விசாரணை
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்குகளிலிருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 23) விசாரணைக்கு வருகின்றன.
2006-2011 வரையிலான திமுகவின் ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவரது மனைவி மணிமேகலை மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.
2012ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மனுவை ஏற்று, அவரையும், அவரது மனைவியையும் வழக்கில் இருந்து விடுவித்து 2022ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.
இதேபோல, 2006-2011ஆம் ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி உள்ளிட்டோருக்கு எதிராகவும் லஞ்ச ஒழிப்புத் துறை, சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்திருந்தது. 2012ஆம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கும், ஸ்ரீவில்லிபுத்தூரில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோது, வழக்கில் இருந்து விடுவிக்க கோரி கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்று அவர்களை விடுவித்து கடந்த ஜூலை மாதம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த இரு உத்தரவுகளையும் எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் மேல் முறையீடு செய்யாததால், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த இரு வழக்குகளும் இன்று (ஆகஸ்ட் 23) காலை முதல் மற்றும் இரண்டாவது வழக்குகளாக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.