இந்திய அணியினருக்கு ஆணவமா? ; கபில்தேவுக்கு ரவீந்திர ஜடேஜா ‘நச்’ பதில்
டிரினிடாட்: இந்திய கிரிக்கெட் அணியில் ஆணவம் ஊடுருவியிருப்பதாக முன்னாள் வீரர் கபில்தேவ் கூறிய கருத்துக்கு ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பதிலளித்துள்ளார்.
தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியினருக்கு ஆணவம் ஏற்பட்டுள்ளதாகவும் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம் வந்துள்ளதாகவும் முன்னாள் கேப்டன் கபில்தேவ் அண்மையில் தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கபிலின் கருத்துக்கு ஆல்–ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பதிலளித்திருக்கிறார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஜடேஜா, அணியின் ஒரே கவனம் இந்தியாவுக்கு வெற்றி தேடித் தருவதில் மட்டுமே உள்ளது என்றும், தனிப்பட்ட இலக்குகள் எதுவும் இல்லை எனவும் தெளிவுபடுத்தினார். வீரர்களின் அர்ப்பணிப்பும், உறுதியும் வெற்றி பெறுவதும் பெருமையுடன் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதும் தான் இலக்காக உள்ளது என ஜடேஜா தெரிவித்தார்.
ஒவ்வொருவருக்கும் தனித்தனி கருத்து உள்ளது எனக் குறிப்பிட்ட ஜடேஜா, முன்னாள் வீரர்கள் தங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ள முழு உரிமை உள்ளது என்றும் கூறினார்.
“தற்போதைய அணியில் எந்த ஆணவமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை“என்று ரவீந்திர ஜடேஜா மேலும் தெரிவித்தார்.
“எல்லோரும் கிரிக்கெட்டை ரசிக்கின்றனர், அனைவரும் கடினமாக உழைக்கின்றனர், யாரும் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, பொதுவாக இந்திய அணி ஒரு போட்டியில் தோல்வி அடையும்போது இதுபோன்ற கருத்துகள் வரும்“என கபில்தேவுக்கு ரவீந்திர ஜடேஜா பதிலளித்துள்ளார்.