WHO IS SARFARAZ KHAN? அவரைச் சுற்றி ஏன் இந்த சர்ச்சை?

WHO IS SARFARAZ KHAN? அவரைச் சுற்றி ஏன் இந்த சர்ச்சை?

மும்பை; இந்திய கிரிக்கெட் அணியில் புதிதாக ஒரு வீரர் சேர்க்கப்பட்டால், அவரைப் பற்றியும் அவரது பின்னணி குறித்தும் அலசி ஆராயப்படுவது வழக்கம். ஆனால், அணியில் இடம் கிடைக்காததால் மூலை முடுக்கெல்லாம் பேசப்படும் நபராகி உள்ளார் ஒரு வீரர். அவர், சர்ஃபராஸ் கான்.

1997ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி மும்பையில் பிறந்த இவர், சிறுவனாக இருக்கும்போதே கிரிக்கெட் மீது காதல் கொண்டவர்.

12 வயதில், ஹாரிஸ் ஷீல்டு (Harris Shield) பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில்,  ரிஸ்வி ஸ்பிரிங்ஃபீல்டு அணிக்காக ஒரே இன்னிங்ஸில் 439 ரன்கள் குவித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அவரது இன்னிங்ஸில், 56 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்ஸர்கள் அடங்கும்.

இதன் மூலம் ஹாரிஸ் ஷீல்டு பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில், அதிக ரன்கள் அடித்து முன்பு படைக்கப்பட்டிருந்த சாதனையை முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்தினார், சர்ஃபராஸ்.

இருப்பினும், பிற போட்டிகளில் அறிமுகத்திற்கு முன்னர், வயது குறித்து பொய்யான தகவலைக் கூறி ஏமாற்றியதாக சர்ஃபராஸ் கானை இடைநீக்கம் செய்தது, மும்பை கிரிக்கெட் சங்கம். ஆனால், பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஒரு மேம்பட்ட சோதனையின் முடிவில், அவர் குறிப்பிட்ட வயது உண்மையானதுதான் என ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பின்னர், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் மும்பை அணியில் மிகச்சிறந்த பங்களிப்பை செலுத்தினார். அப்போது தனது தந்தையும் பயிற்சியாளருமான நௌஷாத் கான் மூலம் பயிற்சிபெற்ற சர்ஃபராஸ், 2013-ல் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான நாற்கோணத் தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்தார் அதில், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில், 66 பந்துகளில் 101 ரன்கள் குவித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.

இதன் தொடர்ச்சியாக, 2014-ல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணியில் இடம் கிடைத்தது. அதில் ஆறு ஆட்டங்களில் 70.33 என்ற சராசரியில் 211 ரன்கள் எடுத்ததால், அடுத்த நிலைக்கு உயர்ந்தார் சர்ஃபராஸ் கான்.

2015ஆம் ஆண்டில், ஐ.பி.எல் தொடரில் அவரை 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. அதன் மூலம் ஐ.பி.எல் போட்டியில் விளையாடும் இளம் வீரர் என்ற பெயரும் கிட்டியது.

வங்கதேசத்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் 6 போட்டிகளில் 355 ரன்கள் குவித்து பல்வேறு தருணங்களில் இக்கட்டான நிலையிலிருந்த இந்திய அணியை மீட்டார்.

உள்ளூர் போட்டிகளில் ஜொலித்த சர்ஃபராஸ் கானால், ஐ.பி.எல் போட்டிகளில் வளமையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. ஐ.பி.எல் தொடரில் இதுவரை 50 போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர், 585 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். ஐ.பி.எல் போட்டிகளில் அவரது சராசரி 22.50 என்ற அளவிலேயே உள்ளது. அதில் சர்ஃபராஸ் கான் ஒரேயொரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார்.