அறிமுக வீரர் ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா சதம்; வலுவான நிலையில் இந்தியா  

அறிமுக வீரர் ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா சதம்; வலுவான நிலையில் இந்தியா   

டொமினிகா: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு சுருண்ட நிலையில், முதல் இன்னிங்சை ஆடத் தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில், விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்திருந்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அறிமுக வீரர் ஜெய்ஸ்வால் 40 ரன்களுடனும், கேப்டன் ரோகித் சர்மா 30 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த அவர்கள் மிகவும் நிதானமாக விளையாடினர்.

இவர்கள் இருவரையும் பிரிக்க மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் கிரேக் பிராத்வெயிட் 9 பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தினார். அவர்களில் ரஹ்கீம் கார்ன்வால் மட்டுமே இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினார்.

இருப்பினும், கார்ன்வாலுக்கு மார்பில் தொற்று ஏற்பட்டதால் பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறினார். நிதானமாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா, சதமடித்து 103 ரன்களில் ஆட்டமிழந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடித்திருக்கும் 10ஆவது சதம் இதுவாகும். இந்தியாவுக்கு வெளியே  அவர் அடித்துள்ள 2ஆவது சதம். முதல் விக்கெட்டிற்கு ஜெய்ஸ்வால் – ரோகித் சர்மா இணை 229 ரன்கள் சேர்த்தது.

பயிற்சியாளர் ராகுல் டிராவிடிடம் கூறியிருந்தபடி மூன்றாவது வீரராக களமிறங்கினார் சுப்மன் கில். ஆனால், 6 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார். பின்னர் களமிறங்கிய விராட் கோலியும் ஜெய்ஸ்வாலும் பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

தொடக்கம் முதல் மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சை சாதுர்யமாக கையாண்ட அறிமுக வீரரான ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி சதம் கண்டார். இதன் மூலம்  டெஸ்ட்டில் ஷிகர் தவான் மற்றும் பிருத்வி ஷாவுக்குப் பின்னர் அறிமுகப் போட்டியிலேயே சதமுடித்த மூன்றாவது இந்திய தொடக்க ஆட்டக்காரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரானார் ஜெய்ஸ்வால். அத்துடன் அறிமுகப் போட்டியிலேயே சதமடித்த 17ஆவது இந்திய வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிட்டியது.

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 143 ரன்களுடனும் விராட் கோலி 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்திய அணி மேற்கிந்திய தீவுகளைவிட 162 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி இந்தியா முன்னிலை பெற்றிருப்பது இதுவே முதல்முறையாகும்.