அஷ்வின், ஜடேஜா அசத்தல்: 150 ரன்களில் சுருண்டது மே.இ.தீவுகள்

அஷ்வின், ஜடேஜா அசத்தல்: 150 ரன்களில் சுருண்டது மே.இ.தீவுகள்

டொமினிகா:  இரண்டு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாட இந்திய அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.அதன்படி, முதல் டெஸ்ட் டொமினிகாவில் இந்திய நேரப்படி நேற்றிரவு (12, ஜூலை) தொடங்கியது.

டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் கிரேக் பிராத்வெயிட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, பிராத்வெய்ட்டும், தேஜ்நரின் சந்தர்பாலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். சுமார் ஒரு மணி நேரம் தாக்குப்பிடித்த இவர்கள் இருவரும், சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் பந்துவீசத் தொடங்கியதும் நடையைக் கட்டினார்கள்.

அஷ்வினுடன் சேர்ந்து ரவீந்திர ஜடேஜாவும் சுழல் வித்தையைக் காட்ட ரன் சேர்க்க முடியாமல் மேற்கிந்திய தீவுகள் அணி தத்தளித்தது. அவ்வணியின் வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக நடையைக் கட்ட, மேற்கிந்திய தீவுகள் 150  ரன்களுக்கு அடங்கிப் போனது.

மாயாஜால பந்துவீச்சில் மிரளவைத்த ரவிச்சந்திரன் அஷ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் அவர் 5 விக்கெட்டுகளை சாய்த்தது இது 33ஆவது முறையாகும். அவருக்கு ஈடுகொடுத்து பந்துவீசிய ஜடேஜா 3 விக்கெட் கைப்பற்றினார்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடத் தொடங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், அறிமுக வீரர் ஜெய்ஸ்வாலும் களம் கண்டனர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்துள்ளது.

ஜெய்ஸ்வால் 40 ரன்களுடனும், ரோகித் சர்மா 30 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (13, ஜூலை) தொடர்ந்து நடைபெறுகின்றது.