உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியங்கள்: இந்தியா முதலிடம்
உலகம் முழுவதும் மிகவும் விரும்பப்படும் விளையாட்டுகளில் கிரிக்கெட்டும் ஒன்றாகும். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் போன்ற ஆசிய நாடுகளில் இந்த விளையாட்டு பெரிதும் விரும்பிப் பார்க்கப்படுகிறது. இந்த நாடுகளில் கிரிக்கெட் வீரர்கள் கடவுளாக பார்க்கப்படுகின்றனர்.
உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் வாரியங்கள் லீக் போட்டிகளை ஒழுங்கமைப்பதில் பெரும் பங்காற்றுவதுடன் வீரர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.
ஒரு குறிப்பிட்ட நாட்டில் ஒரு விளையாட்டு மிகவும் பிரபலமெனில், அதன் வாயிலாக வாரியங்கள் அதிக பணம் ஈட்டுகின்றன. அந்த வரிசையில் முதல் ஐந்து இடங்களில் உள்ள கிரிக்கெட் வாரியங்கள் எவை என்பதை காணலாம்.
1. இந்தியா (BCCI)
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் சுமார் 33 ஆயிரத்து 730 கோடி மதிப்புடன், உலகின் மிகப்பெரிய மற்றும் பணக்கார வாரியமாக உள்ளது. அதனருகில் உள்ள நாடுகளைவிட 10 மடங்கு அதிக மதிப்புடன் முதலிடத்தில் இருக்கிறது. உலகின் பழமையான கிரிக்கெட் வாரியங்களில் ஒன்றான இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு, ஐ.பி.எல் போட்டிகள் மூலம் பெருமளவில் வருவாய் கிடைக்கிறது.
இதுதவிர ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள் மற்றும் ஒளிபரப்பு உரிமைகள் வாயிலாகவும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கின்றது.
2. ஆஸ்திரேலியா (CA)
ஆஸ்திரேலியா கிரிக்கெட் என்றழைக்கப்படும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் உள்பட உலகளவில் தொலைக்காட்சி ஒப்பந்தங்களை மேற்கொண்டு அதிகளவில் பொருள் ஈட்டுகிறது. மேலும், பிபிஎல் (BBL) எனப்படும் பிக் பாஷ் லீக் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். இது ஐ.பி.எல் போட்டிக்கு அடுத்தபடியாக உலகின் பெரிய டி20 தொடராகும். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் 2,843 கோடியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
3. இங்கிலாந்து (ECB)
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் என்றழைக்கப்படுகிறது. ராயல் லண்டன் ஒருநாள் கோப்பை மற்றும் டி20 பிளாஸ்ட் போட்டிகள் மூலமாக இங்கிலாந்து வாரியம் வருவாய் திரட்டுகிறது. 2022-ல், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நிகர மதிப்பு 2,135 கோடி ரூபாய் மதிப்புடன் 3ஆவது இடத்தில் உள்ளது.
4. பாகிஸ்தான் (PCB)
இந்தியாவைப் போன்று கிரிக்கெட் பித்து பிடித்த நாடுகளில் மற்றொன்று பாகிஸ்தான். அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் 811 கோடி ரூபாய் மதிப்புடன் நான்காவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் மூலம் உலகம் முழுவதும் ஸ்பான்சர்களை ஈர்க்கிறது பாகிஸ்தான் வாரியம். கிரிக்கெட் உலகின் முப்பெரும் அணிகளுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது பாகிஸ்தான் வாரியம்.
5. பங்களாதேஷ் (BCB)
பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் 802 கோடி ரூபாய் மதிப்புடன், 5ஆவது இடத்தில் உள்ளது. பிரபல நிறுவனங்களின் ஸ்பான்சர்ஷிப் மற்றும் பங்களாதேஷ் பிரிமியர் லீக் மூலம் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு கணிசமாக வருவானம் கிடைத்து வருகிறது.
இவைதவிர, தென்னாப்பிரிக்கா, ஜிப்பாப்வே, இலங்கை, மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் முறையே 6,7,8,9 மற்றும் 10ஆவது இடங்களில் உள்ளன.