ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்; மே.இ.தீவுகள் அணி ‘அவுட்’..

ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்; மே.இ.தீவுகள் அணி ‘அவுட்’..

ஹராரே:  இரண்டு முறை சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெறத் தவறிவிட்டது. 48 ஆண்டுகால உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அவ்வணியின்றி போட்டி நடைபெறவிருப்பது இதுவே முதன்முறையாகும்.

ஜிம்பாப்வே நாட்டில் உள்ள ஹராரே நகரில் நேற்று (01, ஜூலை) நடைபெற்ற தகுதிச்சுற்றின் சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி ஸ்காட்லாந்தை எதிர்கொண்டது. இப்போட்டியில் வென்றால் தான் உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பு உயிர்ப்புடன் இருக்கும் என்ற சூழலில் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது.

ஆனால், 43.5 ஓவர்களில் 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி, 6.3 ஓவர்கள் மீதமிருந்த நிலையில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தோல்வியால், வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை மேற்கிந்திய தீவுகள் அணி இழந்துவிட்டது.

ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் மேற்கிந்திய தீவுகள் அணியின்றி இப்போட்டித் தொடர் நடைபெறவிருப்பது இதுவே முதன்முறையாகும்.

ஒரு காலத்தில் உலகை மிரளவைத்த மேற்கிந்திய தீவுகள் அணி, தற்போது சந்தித்திருக்கும் இந்த வீழ்ச்சி மிகவும் மோசமானதாகப் கருதப்படுகிறது.