இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்; உள்ளூர் வீராங்கனையை பழிதீர்த்த பி.வி.சிந்து
இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் தொடர் முதல் சுற்றில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து உள்ளூர் வீராங்கனை கிரிகோரியா மரிஸ்கா துன்ஜங்கை தோற்கடித்தார். 38 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த ஆட்டத்தில், சிந்து அபாரமாக விளையாடி 21-19, 21-15 என்ற கணக்கில் மரிஸ்கா துன்ஜங்கை வீழ்த்தினார். அதிரடியாக விளையாடிய சிந்து, இந்தோனேஷிய வீராங்கனை துன்ஜங் அடுத்தடுத்து இழைத்த தவறுகளை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு புள்ளிகளை சேர்த்தார். முன்னதாக ஸ்பெயின் மாஸ்டர்ஸ் போட்டியிலும், கடந்த மாதம் நடைபெற்ற மலேசிய மாஸ்டர்ஸ் அரையிறுதியிலும் பி.வி.சிந்து, கிரிகோரியா மரிஸ்கா துன்ஜங்கிடம் தோல்வியைத் தழுவியிருந்தார். அதற்கு பழிதீர்த்துக் கொள்ளும் வகையில், சிந்து இம்முறை அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை வசமாக்கினார்.