வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் ஓய்வு; டெஸ்டில் டெர்ரராக விளங்கியவர்

வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் ஓய்வு; டெஸ்டில் டெர்ரராக விளங்கியவர்

இங்கிலாந்து: ஆஸ்திரேலிய அணி உடனான ஆஷஸ் கிரிக்கெட் தொடருடன் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றார்.

ஸ்டூவர்ட் பிராட் என்றழைக்கப்படும் ஸ்டூவர்ட் கிறிஸ்டோபர் ஜான் பிராட் (Stuart Christopher John Broad), நாட்டிங்காமில், 1986ஆம் ஆண்டு பிறந்தவர்.  ஸ்டூவர்ட் பிராட்டின் தந்தை கிறிஸ் பிராடும் ஒரு கிரிக்கெட் வீரர்தான்.

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உயரம் எப்போதுமே சாதகமான அம்சமாகும். ஸ்டூவர்ட் பிராட் 6 அடி 5 அங்குல உயரம் கொண்டவர் என்பதால், எதிரணியை மிரட்ட அவருக்கு பெரிதும் கை கொடுத்தது. வலதுகை மித வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட், இடதுகையால் பேட் செய்யக்கூடியவர்.

2007ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான அவர், இதுவரை 167 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 604 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வீழ்த்திய 153 விக்கெட்டுகளும் அடங்கும்.  ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 150-க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் இவர் தான்.  

ஷஸ் தொடரின் கடைசி டெஸ்டில் ஸ்டூவர்ட் பிராட் தான் எதிர்கொண்ட கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்ததுடன், 2ஆவது இன்னிங்சில் ஆஸ்திரேலியாவின் கடைசி இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 146 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தான் சந்தித்த கடைசி பந்தில் சிக்ஸரும், வீசிய கடைசி பந்தில் விக்கெட்டும் வீழ்த்திய முதல் வீரர் என்ற அரிய சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.