உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்; கடைசி நாளில் வெல்வோம்: முகமது ஷமி
கடைசி நாள், கைவசமிருப்பது 7 விக்கெட்டுகள், வெற்றிக்குத் தேவை இன்னும் 280 ரன்கள், எட்டிப்பிடிக்குமா இந்திய அணி ?
முடியும் என்கிறார் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி.
இந்தியாவின் எஞ்சிய பேட்டிங் வலிமையான விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, கே.எஸ்.பரத் மற்றும் ஷர்துல் தாக்குர் ஆகியோரின் கூட்டு ஆஸ்திரேலிய பந்துவீச்சை மழுங்கடிக்க உதவும் என நம்புகிறார் முகமது ஷமி.
கடைசி நாளான இன்று நிச்சயம் வெற்றியை வசப்படுத்த முடியும் என்று 100 விழுக்காடு அனைவரும் நம்புவதாகவும் முகமது ஷமி கூறியுள்ளார்.
இது சாத்தியம் என்பதை நினைவுபடுத்தும் வகையில், ஓவல் மைதானத்தில் நேற்றைய தினம் ஒரு ரசிகர் பிளக்ஸ் கார்டு ஒன்றை தூக்கிப் பிடித்திருந்தார். அந்தக் கார்டில், "ரிஷப் பந்துக்காக இதனை செய்துமுடி" என எழுதப்பட்டிருந்தது. ஆம், 2020- 2021 ஆம் ஆண்டில் இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது, பிரிஸ்பேனில் நடைபெற்ற 4ஆவது டெஸ்ட்டில் ஒரு அதிசயத்தை நிகழ்த்திக் காட்டினார் ரிஷப் பந்த். 328 ரன்கள் என்ற வெற்றி இலக்கை போட்டியின் கடைசி நாளன்று, கடைசி தருணத்தில் எட்டி, இந்திய அணிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தேடித் தந்தார் ரிஷப் பந்த். அத்தகையதோர் வெற்றியை இந்திய அணி இம்முறையும் பெறுமா என்பதைக் காண கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். அவர்களது எண்ணம் ஈடேறும் என நம்புவோம்.