மணிப்பூரில் பெருமளவில் ஆயுதங்கள் மீட்பு; அதிர்ச்சியில் மத்திய – மாநில அரசுகள்
கலவரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் பெருமளவில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் இருக்கும் மேதே சமூகத்தினரை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் இணைப்பதற்கு எதிராக நடைபெற்ற பழங்குடியினர் அமைதிப் பேரணியில் இருபிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இது வன்முறையாக மாறி மாநிலம் முழுவதும் பரவியதில் சுமார் 80 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மணிப்பூரில் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்னைக்கு தீர்வு காண்பது பற்றி பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தினார். இதுபோன்ற சூழலில், மணிப்பூரில் இதுவரை 1,040 ஆயுதங்கள், 13 ஆயிரத்து 601 வெடிமருந்துகள் மற்றும் 230 வகையான வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக மாநில அரசின் பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் தெரிவித்துள்ளார். சில மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு 15 மணி நேரம் வரையிலும், சிலவற்றில் 12 மணி நேரம் வரையிலும் தளர்த்தப்பட்டுள்ளதாவும் குல்தீப் சிங் கூறியிருக்கிறார்.