எதிர்க்கட்சிகள் கூட்டணி ‘ஒரு கிழக்கிந்திய கம்பெனி': பிரதமர் மோடி கடும் தாக்கு
டெல்லி: எதிர்க்கட்சிகள் கூட்டணி ‘ஒரு கிழக்கிந்திய கம்பெனி’ ‘இந்தியன் முஜாஹிதீன்‘ என பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். எதிர்க்கட்சிகள் கூட்டணி ‘திசையற்றது’ என்றும் பிரதமர் சாடி உள்ளார்.
டெல்லியில் இன்று (ஜூலை 25) நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்றக்குழு கூட்டத்தில் பேசிய மோடி, எதிர்க்கட்சிகளின் புதிய கூட்டணியான I.N.D.I.A –யுடன் “ இந்தியன் முஜாஹிதீன்“, "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா" போன்ற அமைப்புகளை மேற்கோள் காட்டி விமர்சித்தார். கூட்டணிக்கு I.N.D.I.A என பெயர் சூட்டிக் கொண்டு தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்வதாக பிரதமர் தெரிவித்தார்.
I.N.D.I.A என்ற பெயரைப் பயன்படுத்துவதால் எல்லாம் வந்துவிடப் போவதில்லை என்று குறிப்பிட்ட மோடி, நாட்டின் பெயரைப் பயன்படுத்தி மக்களை தவறாக வழிநடத்த முடியாது என்று பேசினார்.
“தோல்வி, சோர்வு, நம்பிக்கையற்ற, மோடியை எதிர்ப்பது என்ற ஒற்றை இலக்குடன் எதிர்க்கட்சிகள் செயல்படுவதாகவும்“ பிரதமர் குறிப்பிட்டார். “அவர்களது நடத்தை அவர்கள் எதிர்க்கட்சியாகவே இருக்க முடிவு செய்ததை காட்டுகிறது“என்று பிரதமர் மோடி கூறினார்.
மணிப்பூர் பிரச்னையால் தனது இதயம் வேதனையாலும், கோபத்தாலும் நிரம்பியுள்ளதாக குறிப்பிட்ட அவர், எந்தக் குற்றவாளியையும் தப்பிக்க விட மாட்டோம் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மணிப்பூரின் மகள்களுக்கு நிகழ்ந்தை மன்னிக்கவே முடியாது என பிரதமர் பேசினார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் ஆதரவுடன் பாரதிய ஜனதா எளிதில் வெற்றி பெறும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.