பாஜக செலுத்திய நஞ்சை அகற்ற 15 ஆண்டுகள்: நிர்மலா சீதாராமனின் கணவர் விமர்சனம்
சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர், அவ்வப்போது மத்திய பாரதிய ஜனதா அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டுகள், மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் போன்றவற்றை பிரபாகர் அதிகளவில் சாடி உள்ளார்.
அவர் எழுதியிருக்கும் “THE CROOKED TIMBER OF NEW INDIA” என்ற நூல் கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது.
அந்தப் புத்தகம் குறித்த கலந்துரையாடல் சென்னையில் இன்று (ஜூலை 25) நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய பரகலா பிரபாகர், நாட்டின் மதச்சார்பற்ற பன்மைத்துவ, ஜனநாயக ஆதாரங்களை மத்திய அரசு சீரழித்து வருவதாக குற்றஞ்சாட்டினார். இந்திய அரசியல், சமூகம், பொருளாதாரம் என அனைத்தும் சிதைந்துவிட்டதாக அவர் சாடினார்.
கொரோனாவுக்கு முந்தைய நிலைக்குக்கூட பொருளாதாரம் இன்னும் திரும்பாத சூழலில், 13.5 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாக மத்திய எவ்வாறு கூற முடியும் என்றும் அவர் வினவியுள்ளார்.
2024ஆம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா தோற்கடிக்கப்பட்டாலும், அவர்கள் நாட்டில் செலுத்திய விஷத்தை அகற்ற 15 ஆண்டுகள் ஆகும் எனவும் பரகலா பிரபாகர் தெரிவித்துள்ளார்.