டைட்டன் நீர்மூழ்கி வெடித்துச் சிதறியது எப்படி? உறைய வைக்கும் தகவல்கள்
அட்லாண்டிக்: வடக்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் 5 பேருடன் காணாமல் போன டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்துச் சிதறியது தொடர்பாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
1912ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்கள் கனடா அருகே அட்லாண்டிக் கடல் பகுதியில் சுமார் 12,500 அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. இவ்விடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொள்ளும் பணியில் அமெரிக்காவைச் சேர்ந்த ஓசியன் கேட் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
இதற்கென டைட்டன் என்ற நீர்மூழ்கி, பைலட் உள்பட 5 பேர் பயணம் செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக ஆழ்கடல் ஆய்வுக்கு நிதி திரட்டுவதற்கு, டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் சாகச சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை ஓசன்கேட் நிறுவனம் அறிமுகம் செய்தது.
இந்த சாகச சுற்றுலா மூலம் டைட்டானிக் கப்பலை பார்வையிட ஒருவருக்கு சுமார் இரண்டரை கோடி ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளில் 45-க்கும் அதிகமானோர் இந்த நீர்மூழ்கியில் சென்று டைட்டானிக் கப்பலை பார்வையிட்டு திரும்பி உள்ளனர்.
இதேபோன்று டைட்டன் நீர்மூழ்கி பயணம் கனடாவில் உள்ள நியூஃபவுன்ட்லேண்ட் நகரில் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது.
இதில் இங்கிலாந்து தொழிலதிபர் ஹாமிஸ் ஹார்டிங் உள்பட 5 பேர் பயணம் மேற்கொண்டனர்.
நீர்மூழ்கி புறப்பட்ட 1 மணி நேரம் 45 நிமிடத்தில், அது தன்னுடைய தகவல் தொடர்பை இழந்தது. இதனைத் தொடர்ந்து டைட்டன் நீர்மூழ்கியை தேடும் பணி தொடங்கப்பட்டது.
நீர்மூழ்கியில் 96 மணி நேரத்திற்கு தேவையான பிராணவாயு மட்டுமே இருந்ததால், தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இதில் விக்டர் 6000 என்ற ரோபோவும் பயன்படுத்தப்பட்டது.
இதுபோன்ற சூழலில் டைட்டானிக் கப்பல் மூழ்கிக் கிடக்கும் இடத்திலிருந்து ஆயிரத்து 600 அடி ஆழத்தில் டைட்டன் நீர்மூழ்கியின் பாகங்கள் சிதறிக் கிடப்பதாக அமெரிக்க கடலோர காவல் படை கூறியது.
ஆழ்கடலில் அதிக அழுத்தம் ஏற்பட்டு டைட்டன் நீர்மூழ்கி உடைந்து சிதறியிருக்கலாம் என்று தெரிகிறது.
விபத்தில், நீர்மூழ்கியில் பயணித்த 5 பேரும் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதிக அழுத்தம் காரணமாக நீர்மூழ்கி சிதறியிருக்கக்கூடும் என நம்பப்படுவதால், அதில் சென்றவர்களின் உடல் பாகங்களை மீட்க வாய்ப்பு இல்லை என்று ஆழ்கடல் ஆய்வு நிபுணர்கள் கூறியுள்ளனர்.