மழை வெள்ள பலி 72ஆக உயர்வு; ரூ.10,000 கோடி இழப்பு
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெருமழை பெய்ததால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தலைநகர் சிம்லாவில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோயில் இடிந்து விழுந்தது. இதில் சிக்கி 10 பேர் உயிரிழந்துவிட்டனர்.
பெரும்பாலான பகுதிகளில் மழை குறைந்துள்ள போதிலும், மலைப் பகுதிகளில் நிலச்சரிவுகள் தொடர்கின்றன. இதனால் மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட ஏறக்குறைய 700 சாலைகள் மூடப்பட்டுவிட்டன. மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மழையால் பல அணைகளின் நீர்மட்டம் உயர்ந்ததால் பல கிராமங்களை அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாங்க் அணைக்கு அருகிலுள்ள காங்க்காரா என்ற இடத்தில் தாழ்வான பகுதிகளிலிருந்து 800-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் (Sukhvinder Singh Sikhu) சுக்விந்தர் சிங் சுக்கு, “எங்கள் மாநிலம் ஒரு கடினமான கட்டத்தை கடந்து வருவதாகவும், இருப்பினும் நாங்கள் மக்களுடன் இருந்து அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும்“ தெரிவித்தார். இந்த பருவமழைக் காலத்தில் ஏற்பட்டிருக்கும் சேதத்தால் 10,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
இதனிடையே முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, கனமழை மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.