5 மாநிலத் தேர்தல்கள்; பாஜக தலைவர்களுடன் மோடி ஆலோசனை
டெல்லி: மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் முடிவடைகிறது. எனவே, அந்த மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன.
அதன் தொடர்ச்சியாக, 2024ஆம் ஆண்டில், ஏப்ரல் அல்லது மே மாதம் வாக்கில் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வருவிருக்கின்றது.
அந்த தேர்தல்களுக்கு வகுக்க வேண்டிய வியூகங்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜகவின் உயர்மட்டத் தலைவர்கள் டெல்லியில் நேற்றிரவு (28,ஜூன்) கூடி ஆலோசனை நடத்தினர்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா தோல்வி அடைந்ததால், வரவிருக்கும் 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் எத்தகைய பரப்புரைகளை மேற்கொள்வது என்பது குறித்து அவர்கள் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாநில அளவிலும், தேசிய அளவிலும் அரசு மற்றும் கட்சி அமைப்புகளுக்குள் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் மக்களவை தேர்தல் சேர்ந்து நடத்தப்படலாம் எனவும் டெல்லியில் தகவல்கள் உலா வருகின்றன.